சுவிட்சர்லாந்தை 1-6என வீழ்த்தி அசத்தல்; 16 ஆண்டுக்கு பின் கால் இறுதியில் போர்ச்சுகல்: ஹாட்ரிக் கோல் அடித்த கோன்கலோ ராமோஸ்

தோகா: 22வது பிபா உலககோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. இதில் ரவுன்ட் ஆப் 16 சுற்றில் நேற்றிரவு 12.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடந்த போட்டியில், லீக் சுற்றில் எச் பிரிவில் முதலிடம் பிடித்த போர்ச்சுகல், ஜி பிரிவில் 2ம் இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள போர்ச்சுகல், 21வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்துக்கு எதிராக தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த போட்டியில் விளையாடவில்லை. பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸால் தைரியமான இந்த முடிவை எடுத்து ரொனால்டோவுக்கு மாற்றாக, 21 வயது கோன்கலோ ராமோசை அறிமுக வீரராக களம் இறக்கினார்.

ஆட்டம் ஆரம்பம் முதலே பந்து போர்ச்சுக்கல் வீரர்கள் வசம் இருந்த நிலையில் அறிமுக வீரர் ராமோஸ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி,  17வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது முத்திரையை பதிவு செய்தார். போர்ச்சுகல்லின் மற்றொரு வீரர் பெப் 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 2-0 என முன்னிலை பெற்றது.

2வது பாதி ஆட்டம் தொடங்கியதும் ராமோஸ் 51வது நிமிடம் மற்றும் 67வது நிமிடத்தில் கோல் அடித்து மிரட்டினார். அதேபோல், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், பேல் லியோ 92-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஆறுதல் கோல் அடித்தார். முடிவில் சுவிட்சர்லாந்தை 1-6 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

21 வயது வீரர் கோன்கலோ ராமோஸ் தனது அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் கோல் அடித்து கவனம் ஈர்த்துள்ளார். போர்ச்சுக்கல் ரசிகர்கள் அவரை தங்கள் அணியின் புதிய ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர். 16 ஆண்டுக்கு பின் போர்ச்சுக்கல் அணி உலக கோப்பை தொடரில் கால் இறுதிக்கு தகுதி பெற்றது. கோன்கலோ ராமோஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். கால்இறுதியில் வரும் 10ம் தேதி மொராக்கோவுடன் போர்ச்சுகல் மோத உள்ளது.

Related Stories: