பேரணாம்பட்டில் காதல் திருமணமான 3 மாதத்தில் கொடூரம் புதுபெண்ணின் முகம், கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளி கொலை-ஆர்டிஓ விசாரணை

பேரணாம்பட்டு :  பேரணாம்பட்டில் காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுபெண்ணின் முகம், கை, கால்களை துணியால் கட்டிபோட்டு கிணற்றில் தள்ளி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு திரு.வி.க நகரை சேர்ந்தவர் ராஜா, கூலித்தொழிலாளி. இவரது மகள் ராஜேஷ்வரி(19). இவர் பேரணாம்பட்டு  ரங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தர்(20) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதமின்றி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீதரின் வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில், திருமணம் செய்து கொண்ட நாள் முதலே தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஷ்வரி அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீதர், ராஜேஷ்வரிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த ஸ்ரீதர், ராஜேஷ்வரியை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேதனையடைந்த ராஜேஷ்வரி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதுகுறித்து ஸ்ரீதர், ராஜேஷ்வரியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தாய்வீட்டிற்கும் செல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷ்வரியை, ஸ்ரீதர் பல இடங்களில் தேடியுள்ளார். இதற்கிடையில், ரங்கம்பேட்டை அடுத்த கோக்கலூர் பகுதியில் கணபதி என்பவரின் விவசாய கிணற்றில் இளம்பெண்ணின் முகத்தை துணியால் சுற்றி கட்டியபடியும், கை, கால்கள் துப்பட்டாவால் கட்டியப்படி சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண், ஸ்ரீதரின் மனைவி ராஜேஷ்வரி என்பதை உறுதி செய்தனர்.

யாரோ மர்ம ஆசாமிகள் ராஜேஷ்வரியின் முகத்தை துணியால் கட்டியதோடு, கை, கால்களையும் கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதற்கிடையே ராஜேஷ்வரியின் தந்தை ராஜா, தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது, இதற்கு காரணமான குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை யாராவது கைகால்களை கட்டிப்போட்டு, பலாத்காரம் செய்து கொலை செய்து பின்னர் கிணற்றில் வீசிச்சென்றனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதால், குடியாத்தம் ஆர்டிஓ வெங்கட்ராமன், டிஎஸ்பி ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்தகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிஎஸ்பி ராமமூர்த்தி கூறுகையில், ‘இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆர்டிஓ விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் பிரேத பரிசோதனையில் முழுவிவரங்கள் தெரியவரும். இதுதொடர்பாக தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றார்.

Related Stories: