இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதலிடம் 1 லட்சம் படுக்கை வசதி கொண்ட மாநிலம் தமிழகம்: நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் பயன்

சென்னை: இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கப்பூர்வமான பங்கினை அளிக்க இயலும். தரமான மருத்துவ வசதிகளைப் பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நோய் தடுப்பு பணிகளிலும் நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதிலும் கவனம் செலுத்தி நலமான சமுதாயத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. பொது சுகாதாரத்தை பராமரிப்பதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் பராமரிப்பதில் மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக முன்னேறி வருகிறது. தமிழகத்தில் 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 50 மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனைகள், ஒரு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 273 வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள், 1,806 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,713 துணை சுகாதார நிலையங்கள், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 நகர்ப்புற சமுதாய மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் 99.8 சதவீத பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் தகுதியும், பயிற்சியும் பெற்றவர்களால் நடத்தப்படுகிறது. தொற்று நோய்களை ஒழிப்பதில் தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோய் ஒழிப்பிலும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. அதிக உயிரிழப்புக்கு காரணங்களான நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்று இல்லாத நோய்களை கட்டுப்படுத்துதல் அவசிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7.5 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில் கொரோனா காலத்தில் மருத்துவ படுக்கைகளின் தேவை அதிகரித்ததன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் படுக்கைகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டன. இதன் விளைவாக, தற்போது அரசு மருத்துவமனைகளில் 99,435 படுக்கைகள் உள்ளன. இதன் மூலமாக இந்திய அளவில் அதிக மருத்துவ படுக்கைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

குறிப்பாக, இந்தியாவில் பாஜ ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பாஜ முதலமைச்சர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். இருப்பினும் பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில்கூட குறைந்த அளவிலேயே படுக்கை வசதிகள் உள்ளன. யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் மாநிலமாக உத்தரபிரதேசத்தில் 25 கோடி மக்கள் தொகை. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால், அங்கு அரசு மருத்துவமனைகளில் 66,700 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

பாஜவுடன் கூட்டணி அமைத்து ஆளும் மாநிலமான 11 கோடி மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் 31,028 படுக்கைகள் உள்ளன. 6.5 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்தில் 29,402 படுக்கைகள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் உள்ளன. ஆனால், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் அளவிலான படுக்கைகள் மருத்துவமனைகளில் மட்டுமே இருந்து வருகிறது. இதன் மூலம் இந்திய அளவில் சுகாதாரத்துறை பங்களிப்பில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வருகிறது. மேலும் சிறந்த மருத்துவ கட்டமைப்பை குடிமக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. 70,000 பேர் உள்நோயாளிகள், 10,000 அறுவை சிகிச்சைகள் பெறும் வகையில் நாளொன்றுக்கு 6 லட்சம் பேர் பயனடைகிறார்கள்.

இந்நிலையில், திமுக அரசு பதவியேற்ற நிலையில் ஆகஸ்ட் 5, 2021ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டமும், கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி நம்மை காக்கும் 48-இன்னுயிர் காப்போம்  திட்டமும் தொடங்கப்பட்டது. இந்த சிறப்பான திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையில் மேற்கொள்ளப்படும் சிறப்பான நடவடிக்கையாக நாட்டின் எந்த மாநிலங்களிலும் கிடைக்காத அளவிற்கு பிற்படுத்தப்பட்டோர், நடுத்தர வர்க்கத்தினர், உயர்தர பிரிவினர் என்ற எந்த ஒரு வேறுபாடும் இன்றி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சையின்மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையில் இருந்து, தற்போது 81 சதவீதம் பேர் அரசு மருத்துவமனையை நம்பி சிகிச்சைக்கு செல்கின்றனர். தனியார் மருத்துவமனைக்கு செல்ல வசதியில்லை என்றாலும்  அதை ஒப்பிடும்போது  அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் தரம் உயர்வாக உள்ளது. விரைவில் வீடு  திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ காப்பீடு திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.302 கோடி செலவில் 2499 அதி தீவிர சிகிச்சை படுக்கைகளை தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைத்தார். இதனால், மேலும் 5,500 படுக்கை வசதிகள் திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளியாவதற்கான குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.72,000 இருந்து ரூ.1,20,000 ஆக உயர்த்தப்பட்டது.

48மணி நேரஅவசர சிகிச்சை செலவு

நம்மை காக்கும் 48 இன்னுயிர் காப்போம் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும். அதேபோல் விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நபருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். விபத்தில் சிக்சியவர்கள் பிற நாடு, பிற மாநிலத்தை சேர்ந்தாலும் இந்த திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவரும் பயன்பெறலாம். இதை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நவம்பர் 30ம் தேதி வரை விபத்தில் சிக்கிய 1,17,671 பேர் அரசு மருத்துவமனையிலும், 12,273 பேர் தனியார் மருத்துவமனையிலுமாக மொத்தம் 1,29,944 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக ரூ.115,71,13,973 அரசாங்கம் செலவழித்துள்ளது.

முன்கள பணியாளர்களான மயான பணியாளர்கள்

கொரோனா காலத்தில் மயான பணியாளர்களை உலகிலேயே முதன்முறையாக முன்களப்பணியாளர்களாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கோவிட்-19 தொற்று சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் டெங்கு நோயால் பாதித்தவருக்கு பிளாஸ்மா வழங்குவதற்கு பதில் சாத்துக்குடி சாறு வழங்கப்பட்டது. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க தயக்கம் காட்டி நெருங்க மறுத்ததால் 6 மணிநேரம் வலியில் துடித்த சம்பவம் அரங்கேறியது.

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவில் புலம்பெயர்ந்து சென்று வசித்து வந்த பெண், கர்நாடக அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டு, புதிதாக பிறந்த அவரது 2 குழந்தைகள் உள்பட 3 பேரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மகப்பேறு அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் துண்டு மறந்து வைக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் மின்வெட்டு ஏற்பட்டதன் காரணமாக செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம், 12 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் தர மறுத்த சம்பவம், உயிரிழந்தவர்களின் சடலங்களை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இன்றி இருசக்கர வாகனத்தில் சடலங்கள் கொண்டு செல்லப்படுவது ஆந்திராவில் தொடர்கதையாகி வருகிறது.

மக்களை தேடி மருத்துவம்...

இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. தொற்று நோயினால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே சுகாதார தேவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நவ.30ம் தேதி வரை 9811484 பேர் பயனடைந்துள்ளனர்.

Related Stories: