தக்காளியை மதிப்புக்கூட்டு பொருளாக்க ஜாம் தொழிற்சாலை அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் விலை வீழ்ச்சி காலத்தில், தக்காளியை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக்க, ஜாம் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியில் உள்ள காந்தி மார்க்கெட், திருவிக மார்க்கெட், தேர்நிலை மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து தினசரி மார்க்கெட்டுகளுக்கு, உள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதுபோல, ஊட்டி, மேட்டுபாளையம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பல்வேறு காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகளை நேரடியாக  கொண்டுவந்து விற்பனை செய்வதற்காக, பாலக்காடு ரோடு நகராட்சி அருகே, நகரின் மையப்பகுதியில்

உழவர் சந்தை செயல்படுகிறது.

இந்த மார்க்கெட்டுகளுக்கு, தக்காளி விளைச்சல் அதிகரிக்கும்போது அச்சமயத்தில், வழக்கத்தைவிட வரத்து அதிகமாக இருப்பது தொடர்கிறது. சில நேரத்தில் தக்காளி விலை மிகவும் வீழ்ச்சியடையும் போது, விலை கட்டுப்படியாகாமல் இருப்பதால், அதனை விவசாயிகள் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். மேலும், விலை வீழ்ச்சியின்போது தக்காளிகள் கால்நடைக்கு உணவாகும் அவலம் ஏற்படுகிறது. மேலும், மார்க்கெட்டில் குப்பையில் கொட்டப்படும் அவலம் ஏற்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் உண்டாகிறது. இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாத்தில் இருந்து பெய்த தென்மேற்கு  பருவ மழையால், பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகரித்ததுடன் அதன் விளைச்சலும் அதிகரித்தது. மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக, 2 மாதத்திற்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, தற்போது நல்ல விளைச்சலடைந்து அறுவடை தீவிரமாகியுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட தக்காளிகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 1 கிலோ தக்காளி  ரூ.20 முதல் ரூ.25வரை  விற்பனையானது. தற்போது, வெளியூர்களிலிருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால்,  மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.9 வரை மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் தக்காளி மேலும் அதிகரிப்பால், அதன் விலை கடுமையாக சரிவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாக உள்ளது. இந்த சூழ்நிலையில், தக்காளி வீணாவதை தவிர்க்க, தக்காளியை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற தனி ஜாம் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகள் இடையே நீண்டநாள் எதிர்பார்ப்பாக  உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் பலர், சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.

ஆனால், பொள்ளாச்சியில் உள்ள ஏதேனும் ஒரு மார்க்கெட் பகுதியில், தக்காளி ஜாம் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை, இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது விவசாயிகளுக்கு இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட அதிகரித்து, அதன்விலை விலை வீழ்ச்சியடையும் போது தேக்கமடைந்து வீணாவதை தடுக்க, குளிர்பதன கிடங்கு அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்து வருவதை, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில் தக்காளியை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற ஜாம் தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் ஈடுபட முன்வர  வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Related Stories: