காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் திருச்சியை சேர்ந்த 2 வீரர்கள் தலா 4 தங்கம் வென்று சாதனை

திருச்சி: காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் திருச்சியை சேர்ந்த 2 வீரர்கள் தலா 4 தங்கம் வென்று சாதனை படைத்தனர். நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் திருச்சி சுப்பிரமணியபுரம் கோனார் தெருவில் வசிக்கும் ஆர்.தினேஷ் கலந்து கொண்டார். இதில் சப்-ஜூனியர் 66 கிலோ எடை பிரிவில் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

டெட் லிப்ட் 218 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கம் வென்றதுடன் முந்தைய சாதனையான 217.5 கிலோ என்ற சாதனை முறியடித்து காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும், இவர் ஸ்குவாட்டில் 200 கிலோ எடையை தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும், மொத்தம் 538 கிலோ எடையை தூக்கியதற்காக தங்கம் என்று 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

இப்போட்டியின் இரண்டாவது அதிகபட்ச எடை தூக்கியவர் என்பதை பாராட்டி இவருக்கு “ஸ்டிராங்மேன்-2” என்ற விருது வழங்கப்பட்டது. மேலும், ஏர்போர்ட், காமராஜ் நகரைச் சேர்ந்த எஸ்.ஷேக் அப்துல்லா 59 கிலோ எடைப் பிரிவில் டெட் லிப்ட் 170 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கமும், ஸ்குவாட்டில் 210 கிலோ எடையைத் தூக்கி தங்கமும், பென்ச் பிரஸ்சில் 120 கிலோ எடையை தூக்கி தங்கமும், மொத்தம் 500 கிலோ எடையை தூக்கியதற்காக தங்கம் என்று நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: