‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் ஜி-20 தலைமையை இன்று இந்தியா ஏற்கிறது: வரும் 5ம் தேதி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன் இன்று ஜி-20 தலைமையை இந்தியா ஏற்கிறது. இந்தோனேசியாவில் கடந்த மாதம் நடந்த ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது, விதிமுறைகளின்படி அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (டிச. 1) அதிகாரபூர்வமாக  ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இதற்காக நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ‘ஜி-20 லோகோ’வால் ஒளிரச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக நாடு முழுவதும் 50 நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன. முதன் முதலாக ஜி-20 ‘ஷெர்பா’ கூட்டம் உதய்பூரில் டிசம்பர் 4 முதல் 7ம் தேதிகளில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் ஜி-20 மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் வரும் 5ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக பல்வேறு துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சுற்றுலா, கலாசாரம் மற்றும் திருவிழாக்கள் ஆகியவை ஜி-20 நிகழ்வுகளுடன் இணைக்கப்படும். நாடு முழுவதும் 75 பல்கலைக்கழகங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அங்கு பொருளாதார விவகாரங்கள், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், சர்வதேச விவகாரங்கள், எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஜி-20 நாடுகளைத் தவிர, வங்காளதேசம், மொரீஷியஸ், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நைஜீரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவார்கள். ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற முழக்கத்துடன், இந்தியாவில் ஜி-20 மாநாட்டு நிகழ்ச்சிகள் அடுத்தாண்டு முழுவதும் கொண்டாடப்படும்’ என்று தெரிவித்தனர்.

Related Stories: