ஆந்திர முதல்வர் ஜெகனின் சகோதரி ஷர்மிளாவை காருடன் இழுத்து சென்று கைது செய்தது போலீஸ்: சந்திரசேகர ராவ் வீட்டை நோக்கி சென்றதால் அதிரடி

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகனின் சகோதரி ஷர்மிளா, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் வீட்டை நோக்கி சென்றதால், அவரை காருடன் டோவ் வண்டியில் இழுத்து சென்று போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற கட்சியை தொடங்கி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவரது பாதயாத்திரையின்போது நேற்று முன்தினம் நர்சம்பேட்டையில் ஆளும் டிஆர்எஸ் கட்சியினருக்கும், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஷர்மிளா பயணம் செய்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு அவரது வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனிடையே பதற்றம் நிலவியதால் ஷர்மிளாவை கைது செய்த போலீசார் ஐதராபாத்திற்கு கொண்டுவந்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று ஷர்மிளா ஐதராபாத்தில் உள்ள லோட்டஸ் பாண்டில் உள்ளது தனது வீட்டில் இருந்து டிஆர்எஸ் கட்சியினரால் சேதப்படுத்தப்பட்ட தனது காரை அவரே ஓட்டி கொண்டு முதல்வர் சந்திரசேகர் ராவ் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். சோமாஜிகுடா என்ற இடத்தில் ஷர்மிளாவின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, காரின் கண்ணாடிகளை மூடிக்கொண்டு, காரில் அமர்ந்தபடி தனக்கு வழிவிடுமாறு போலீசாரிடம் ஷர்மிளா கூறினார். போலீசார் அவரை காரை வீட்டு வெளியே வரும்படி பலமுறை கூறியும் கேட்கவில்லை. இதனால், ஷர்மிளாவை காரை டோவ் வாகனத்தில் சங்கிலியால் கட்டி எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர். காவல் நிலையத்திற்கு சென்ற பிறகும் ஷர்மிளா காரை விட்டு இறங்கவில்லை. நீண்ட நேரம் போராடி கார் கண்ணாடியை திறந்த போலீசார் ஷர்மிளா மற்றும் அவருடன் இருந்தவர்களை கைது செய்தனர். பின்னர் ஷர்மிளா உட்பட 5 பேரையும் நாம்பல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: