மக்கள் தொண்டை தவிர மாற்று சிந்தனை இல்லை; தமிழகத்தில் ஆபத்பாந்தவன் ஆட்சி நடக்கிறது: அரியலூர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கொல்லபுரத்தில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தில் 3 புதிய பணிகளுக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரியலூரில் ரூ.31 கோடி மதிப்பில் 51 முடிந்த பணிகளையும், பெரம்பலூர் மாவட்டத்தில் சென்னை கன்னியாகுமாரி தொழில் தட திட்டத்தின்கீழ் முடிந்த பணி உட்பட ரூ.221 கோடி மதிப்பில் 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் ரூ.52 கோடியே 48 லட்சம் மதிப்பில் 27,070 பயனாளிகளுக்கும், பெரம்பலூரில் ரூ.26.02 கோடி மதிப்பில் 9,621 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அரியலூர் மாவட்டம் அரிய மாவட்டம். கலைஞரை தலைவராக எழ வைத்த மாவட்டம்.

அரியலூர் மாவட்டத்தில் ரூ.30.26 கோடி மதிப்பீட்டில் 51 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளேன். ரூ.1.56 கோடியில் மூன்று புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளேன். இந்த மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.220 கோடியில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.31.38 கோடி மதிப்பீட்டில் 54 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 9,521 பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தி திட்டத்துக்காக 13 வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட 11 கிராமங்கள் உள்ளடங்கிய நிலங்களை சிவசங்கர் குறிப்பிட்டு சொன்னாரே மீண்டும் உரியவர்களிடம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 306 உடமையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உறுதிமொழி ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பகுதியில் ரூ.10 கோடி செலவில் புதை வடிவ பூங்கா அமைய உள்ளது. மக்கள் தொண்டை தவிர மாற்று சிந்தனை இல்லாத மக்கள் நலன் அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக 10 ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. ஆனால் அத்தகைய பாதாளத்திலிருந்தும் கூட தமிழகத்தை பல்ேவறு வகையில் மீட்டெடுத்துள்ளோம் என்பது தான் உண்மை. போட்டி போட்டுக்கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு தமிழகத்துக்கு வருகிறது. ஏற்றுமதி முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம்.

அனைத்து துறைகளிலும் முன்னேற்றப்பாதைக்கு செல்கிறோம். வேளாண்மை உற்பத்தி அதிகமாகி உள்ளது. பாசனப்பரப்பு வசதி அதிகமாகி உள்ளது.

உயர்கல்வியிலும் பள்ளிக்கல்வியிலும் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறோம். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதியால் பெண்களுக்கு நிரந்தரமான வருமானத்தை ஈட்டித்தந்துள்ளோம். ஒரே ஒரு கையெழுத்து மூலம் கோடிக்கணக்கான மகளிர் சமுதாயத்தில் மகிழ்ச்சியை விதைக்க முடிந்துள்ளது.

15 மாத காலத்தில் 1.50 லட்சம் வேளாண் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து தமிழக உரிமைகளை காப்பாற்ற அனைத்தையும் செய்துள்ளோம். கொரோனாவை வென்று காட்டினோம், மழை வெள்ளத்திலிருந்து மக்களை காத்தோம்.

இந்தியாவிலேயே அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கும் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்டதாக தமிழ்நாட்டை உயர்த்துவேன் என்று அறிவித்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இவை அனைத்தும் ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக அரசு செயல்படுத்தும் செயல்கள். ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது, ஒரு முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்த கால அதிமுக ஆட்சி. தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி 10 ஆண்டு காலத்தை நாசமாக்கியவர்கள், இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர்.

யாரிடம் என்று உங்களுக்கு தெரியும். அவர்கள் அளிக்கும் பேட்டிகளை பார்த்து மக்கள் ஏளனமாக சிரிக்கின்றனர். நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால் கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கின்றனர். அய்யோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகின்றனர். அய்யோ தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று இவர்களின் வயிறு எரிகிறது. புலிக்கு பயந்தவன் என்மேல் வந்து படுத்துக்கொள் என்பானே அதுபோல சிலர் ஆபத்து ஆபத்து என்று அலறிக் ெகாண்டிருக்கின்றனர். இப்படி சொல்லும் சிலருக்கு இருக்கும் பதவி நிலைக்குமா என்று பயமாக உள்ளது. திமுக ஆட்சியில் மக்களுக்கு ஒரு ஆபத்தும் இல்லை. மக்களை காக்கும் ஆபத்பாந்தவன் ஆட்சிதான் திமுக ஆட்சி. இது நம்ம ஆட்சி. இது உங்கள் ஆட்சி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: