திருச்சானூரில் 8ம் நாள் பிரமோற்சவம் அலங்கார தேரில் பத்மாவதி தாயார் பவனி

*திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

*இன்று தெப்பகுளத்தில் பஞ்சமி தீர்த்தம்

திருமலை : திருச்சானூரில் 8ம் நாள் பிரமோற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று தெப்பகுளத்தில் பஞ்சமி தீர்த்தத்துடன் பிரமோற்சவம் நிறைவடைகிறது. திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 20ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதன்படி, பிரமோற்சவத்தின் 7வது நாளான நேற்று முன்தினம் காலை சூரியநாராயண சுவாமி அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், இரவு சந்திரபிரபை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிரமோற்சவத்தின் 8வது நாளான நேற்று காலை 7.10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் தாயார் பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

அப்போது, 4 மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கமிட்டனபடி இருகரம் கூப்பி வணங்கினர். தேர் வீதி உலா முடிந்ததும் மதியம் மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன்,  மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில்  ஊஞ்சல் சேவையும் நடந்தது.  பின்னர், இரவு 7 மணி முதல் 9 மணி வரை குதிரை வாகனத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சுவாமி வீதி உலாவின் போது பத்மாவதி தாயாரின் பல்வேறு வேடம் அணிந்தும், மகாவிஷ்ணு, சிவன் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்தும் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நடனமாடியபடி வீதி உலாவில் பங்கேற்றனர். இதில் ஏழுமலையான் கோயில் ஜீயர்கள்,  சந்திரகிரி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, இணை செயலதிகாரி வீர பிரம்மம், முதன்மை பொறியாளர் நாகேஸ்வர ராவ், வி.எஸ்.ஒ. பாலி ரெட்டி,  மனோகர், கோயில் துணை செயலதிகாரி லோகநாதம், ஆகம ஆலோசகர்  நிவாசச்சர்லு, உதவி செயலதிகாரி பிரபாகர் ரெட்டி, கோயில் அர்ச்சகர பாபு சுவாமி,  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், தாயார் பிறந்ததாக கூறப்படும் பத்ம சரோவரம் (தெப்பகுளத்தில்) பஞ்சமி தீர்த்தத்துடன் இன்று பிரமோற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அதிகாரி தர்மா ரெட்டி, கலெக்டர் வெங்கடரமண ரெட்டி மற்றும் எஸ்பி பரமேஷ்வர் ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related Stories: