முதியோரை பாதுகாப்பது நம் கடமை

சர்வதேச அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 60 கோடியாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2025-ல் இரட்டிப்பாகி, 2050-ல் 200 கோடியைத் தாண்டிவிட வாய்ப்புள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கிறார்கள். மருத்துவ வளர்ச்சி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுத்தம், மருத்துவ அறிவியல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் பொருளாதார உயர்வு போன்றவற்றால் அவர்களுடைய வாழ்நாள் அளவு உயர்ந்து வருவதாக தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம்.

முதியவர்கள் தன்னுடைய அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து கொள்வது, பொறுப்புகளை ஏற்று குடும்பத்துக்கு உதவி செய்வது, தன்னார்வப் பணிகளை செய்வதோடு, தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.மேலும் அவர்களுடைய முழு பங்களிப்பு அனைத்துத் தலைமுறையினருக்கும் மிகுதியான பலனைக் கொடுக்கிறது. எனவே, வயதாகும் நிலையிலும் ஆரோக்கியமாக அவர்கள் இருப்பதற்கு, நீடித்த பராமரிப்பை அளிப்பது நம் ஒவ்வொருவரின் முக்கியக் கடமை.

முதியவர்களுக்கு வயது அதிகரிக்கும் அதேவேளையில் நீண்டநாள் நோய்கள் உருவாகி, உடல்நலம் செயலிழந்து போகும் சிக்கலும் மறுபுறம் உருவாகிறது. இதனால் தனியாக, சுதந்திரமாக வாழும் திறனை அவர்கள் இழந்து போக நேரிடுகிறது. அவர்களுடைய நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது. பிறரை சார்ந்திருக்கும் நிலை, சமூக வாழ்க்கையில் இருந்து விலகுதல், குடும்ப உறுப்பினர்களால் புறக்கணிக்கப்படுதல் போன்றவற்றால் அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிறது. இதய நோய்கள், நீரிழிவு, மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களே வளர்ந்து வரும் நாடுகளின் நோய் பளுவிற்கு முக்கிய காரணமாக உள்ளது.

எனவே, முதுமையில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை தனிப்பட்ட ஒரு முதியவரின் பிரச்னையாகப் பார்க்காமல் சமூக சிக்கலாகவே பார்க்க வேண்டும். ஒருநாள் நமக்கும் அதேபோல் வயதாகும். இன்று நமது முதியோர் சந்திக்கும் பிரச்னைகளை நாளை நாமும் சந்திக்க நேரிடும் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம்.

முதியோர் நலன் காக்க நாம் செய்ய வேண்டிய கடமைகள்

* முதியோரை விலைமதிக்க முடியாத வளமாக அங்கீகரிக்க வேண்டும்.

* அவர்களுடைய கவலைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

* அவர்கள் நேசிக்கப்படுவதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

* முதியோருக்குத் தேவையான சுகாதாரப் பராமரிப்பையும், நல மேம்பாட்டையும் வழங்க வேண்டியது நமது கடமை.

60 வயதுக்கு மேற்பட்டவர்களின் கவனத்துக்கு...

* உங்கள் ஆரோக்கியத் தேவைகளைப் புரிந்து கொண்டு முறையாக நோய்த் தடுப்புக்கான பரிசோதனைகளைச் செய்து வர வேண்டும்.

* உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதோடு புரதம், உயிர்ச்சத்து, தாதுச்சத்து, நார்ச்சத்து நிறைந்த சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.

* அதிக உடல் எடை மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதால் மிதமான உடற்பயிற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். அது உடல் வலிமை, சமநிலை, நெகிழ்வுத் தன்மைகளைப் பேண உதவி செய்யும். நடை, யோகா, தியானம் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும்.  

* புகை, மது மற்றும் புகையிலைப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

* உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுப்பது அவசியம் என்பதால் உடலை அதிகமாக வருத்தக் கூடாது.

* சமூக, கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருப்பது நல்லது.

* பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்றி நிறுத்தக் கூடாது. தேவைப்படும் சமயங்களில் முதியோர் நல மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடக்க வேண்டும்.

Related Stories:

>