திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் பயணிகளை பயமுறுத்தும் முதல் பிளாட்பாரம் -உயரம் குறைவாக இருப்பதால் தவறி விழும் அபாயம்

திருமங்கலம் :  திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனின் முதல் பிளாட்பாரம் உயரம் குறைவாக இருப்பதால் ரயிலில் ஏறி இறங்க சிரமப்பட்டும் பலநேரங்களில்  தவறி விழுந்தும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மதுரை நெல்லை ரயில்வே மார்க்கத்தில் திருமங்கலம் முக்கிய ரயில்வே ஸ்டேசனாக இருந்து வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள் என தினசரி 20 ரயில்கள் திருமங்கலத்தில் நின்று செல்கின்றன. இதில் சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடி பெங்களூர் பயணிகள் ரயிலும் அடக்கம். அதிகாலை 2.30 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 11.50 மணி வரையிலும் ரயில்கள் திருமங்கலம் ஸ்டேசனில் நின்று சென்று வருவதால் படுபிசியாக ஸ்டேசன் மாறிவருகிறது.  முன்பதிவு மையமும் இங்கு இயங்குகிறது.

இதனால் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருமங்கலம் ஸ்டேசனை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு இரண்டு பிளாட்பாரங்கள் அமைந்துள்ளன. மதுரை தூத்துக்குடி, மதுரை நாகர்கோவில் ரயில்வே மார்க்கத்தில் தற்போது திருமங்கலத்திலிருந்துதான் இரண்டாவது அகல ரயில்பாதை முழுவதும் நிறைவடைந்து தென்மாவட்டங்களுக்கு செல்கிறது. இதனால் திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனில் இரண்டாவது பிளாட்பாரம் பல்வேறு நவீனவசதிகளுடன் புத்தம்புதியதாக பொழிவு பெற்றுள்ளது.உயரமான பிளாட்பாரம், அதிகளவில் பயணிகள் நிழற்குடை என இரண்டாவது பிளாட்பாரம் காட்சியளிக்கிறது.

மதுரையில் இருந்து விருதுநகர், தென்காசி, நெல்லை, நாகர்கோவில், உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று செல்கின்றன. இந்த பிளாட்பாரத்தில் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி ரயிலில் ஏறி இறங்க முடிகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக முதல் பிளாட்பாரம் அமைந்துள்ளது. நெல்லை, தென்காசி, புனலூர், தூத்துக்குடி,  நாகர்கோவிலில் இருந்து மதுரை மார்க்கத்தில் செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களும் முதல் பிளாட்பாரத்தில் நின்று செல்கின்றன. ஆனால் இந்த பிளாட்பாரம் உயரம் குறைந்து மிகவும் தாழ்வாக இருப்பதால் ரயிலின் படிக்கட்டுகளில் இருந்து பயணிகள் இறங்கி ஏறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

முதியோர்கள், சிறுவர்கள் பலரும் ரயிலில் இருந்து இறங்கும் போது உயரம் குறைந்த பிளாட்பாரமாக இருப்பதால் பலமுறை தவறி விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் முதல் பிளாட்பாரம் மேடும் பள்ளமுமாக இருப்பதால் இரவு வேளையில் சென்னை செல்லும் பயணிகள் தடுமாற்றத்துடனேயே சென்று ரயிலில் ஏறவேண்டியுள்ளது. திருமங்கலத்தில் நிற்காத பல்வேறு ரயில்கள் முதல் பிளாட்பாரத்தினை கடக்கும் போது ஸ்டேசன் பகுதியில் வேகத்தினை குறைத்து செல்கின்றன. அப்போது பலரும் கீழே இறங்க முற்பட்டு பிளாட்பாரம் தாழ்வாக இருப்பதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

 எனவே பயணிகளை பயமுறுத்தும் முதல் பிளாட்பாரத்தினை சரிசெய்து இரண்டாவது பிளாட்பாரம் போல் உயரத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் முதல் பிளாட்பாரத்தில் இன்ஜினையொட்டி இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாததால் சென்னை செல்லும் குருவாயூர் மற்றும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏறுவதில் திருமங்கலம் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே முதல்பிளாட்பாரத்தில் கூடுதல் மின்விளக்குகள் அமைக்கவேண்டும். அதிகளவில் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்பதே திருமங்கலம் நகர மக்களின் கோரிக்கையாகும். இதற்கு தென்னகரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: