2006 வன உரிமை சட்டத்தை அமல்படுத்த கோரி இருளர்இன மக்கள் மயானத்தில் குடியேறும் போராட்டம்

ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட இருளர் சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பழங்குடியின இருளர் மக்கள் குடியிருப்பு பகுதி வன சரகத்திற்கு உட்பட்ட பகுதி. இந்நிலையில் சுமார் 4 தலைமுறையாக இந்த இடத்தில் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு இதில் விவசாய நிலமும் உண்டு. இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு வனத்துறையினர் விவசாய நிலங்களை பறிமுதல் செய்து கொண்டனர்.

தற்பொழுது வேலை எதுவும் இல்லாத நிலையில் தினக்கூலி வேலைகளுக்கு செய்து வருகின்றனர். தற்பொழுது தாங்கள் இருக்கும் இடத்திற்கு பட்டா இல்லாத நிலையும் உள்ளது. இதனால் பலமுறை கோரிக்கைகள் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் தற்பொழுது இருளர் இன மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்கள், பாத்திரங்கள் காய்கறிகளை எடுத்து கொண்டு மயானத்தில் குடியேறி சமைத்து சாப்பிடும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

மேலும் மயான கொட்டகையில் சமைத்து உண்ணவும் உள்ளனர். இந்த நூதன முறை போராட்டம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் வராத நிலையில் உடையார்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: