தன்னிச்சையாக யாரும் இனி செயல்பட முடியாது மாநில நிகழ்வுகளை காங். தலைமை உன்னிப்பாக கவனிக்கிறது: நெல்லையில் ரூபி மனோகரன் எம்எல்ஏ பேட்டி

நெல்லை: மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் அகில இந்திய காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. எனது சஸ்பெண்ட் உத்தரவை நிறுத்தி வைத்த கட்சித் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்தார்.

நெல்லையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம், கட்சியின் வளர்ச்சியை கண்கூடாக வெளிப்படுத்துகிறது. மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை அகில இந்திய காங்கிரஸ் கவனிப்பதில்லை என்ற வீண் பழி, இதன் மூலம் துடைத்து எறியப்பட்டுள்ளது. மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் அகில இந்திய காங்கிரஸ் உன்னிப்பாக கவனிக்கிறது. எனக்கு காலையில் கிடைத்த தண்டனையை மாலையில் நிறுத்தி வைத்து மாபெரும் தீர்ப்பை வழங்கியுள்ளது.  

அகில இந்திய தலைமை எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும், என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதை மன நிறைவோடு ஏற்றுக் கொள்வேன். இன்று இந்தியாவில் எத்தனையோ இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். பொருளாதார சீரழிவு, பண வீக்கம் என நாடு சிக்கலில் உள்ளது. இவற்றையெல்லாம் சரி செய்ய ராகுல் பிரதமராக வேண்டும்.

 காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருக்கும், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவருக்கும், எனக்கும் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. மாநிலத் தலைவரை மாற்றுவது என் கையில் இல்லை. அது அகில இந்திய தலைமை சம்பந்தப்பட்ட விஷயம். காங்கிரசில் இனி யாரும் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே  தலைமையில் காங்கிரசை வளர்ப்போம், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: