இந்தியாவிற்கு எதிராக செயல்பட ‘அல்கொய்தா’ இணையதளத்திற்கு மொழிப்பெயர்ப்பாளர் தேவையாம்!; மாநில அரசுகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவிற்கு எதிராக செயல்படுவதற்காக அல்கொய்தா அமைப்பின் ஆதரவு இணையதளத்திற்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் தேவை என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘அல் கொய்தா’ என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய பிரிவாகக் கருதப்படும் இஸ்லாமிய மொழிபெயர்ப்பு மையம் (ஐடிசி), இந்தியாவிற்கு எதிராக ‘ஜிகாத்’ என்ற புதிய சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள தகவலில், ‘இந்திய முஸ்லீம் இளைஞர்களை ‘ஜிகாதி’ மீடியாவுடன் இணைக்கும் வகையில் ஐடிசியின் வெப் போர்டலில் சில தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த ஜிகாதி ஊடகத்தில், இந்திய முஸ்லீம் இளைஞர்கள் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முஸ்லிம் இளம் பெண்களும் இந்த போர்டலில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவில், ‘அன்பான இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, நீங்கள் ஜிகாதி ஊடகப் பணியில் ஈடுபட விரும்புகிறீர்களா? எங்களுக்கு மொழிபெயர்ப்பாளர்கள்  தேவைப்படுகிறது. எங்களது ஊடகங்களில் பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதி, அதில் சேருங்கள். உங்கள் பணியால்  உங்களைச் சுற்றியுள்ள சகோதர சகோதரிகளுக்கு நன்மை கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளது. எனவே, இந்த தீவிரவாத அமைப்பால் உருவாக்கப்பட்ட ஐடிசி போர்டல் மூலம் இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் நடத்த அந்த அமைப்பு அழைப்பு  விடுத்துள்ளது. தீவிரவாத அமைப்பின் இந்த சதித் திட்டத்தை உணர்ந்து, பாதுகாப்பு  மற்றும் உளவுத்துறையினர் உஷாராக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தகவலை தொடர்ந்து, பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் காவல்துறையின் சிறப்புப் பிரிவு, அனைத்து மாவட்டங்களையும் உஷார்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: