குண்டுக்கட்டாக தூக்கி போட்டு, கண்ணில் கருப்பு துணியால் கட்டி ரூ.5 லட்சம் கேட்டு ஜூஸ் கடைக்காரர், காரில் கடத்தல்; போலீசார் என கூறி வசதிபடைத்தவர்களிடம் கைவரிசை திரிபுராவை சேர்ந்த 3 பேர் கைது: 3 பேருக்கு வலை

தாம்பரம்: திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் உசேன் (30). தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலை இரும்புலியூர் பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி இரவு  முகமது அன்வர் உசேனின்  கடை முன்பு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கி வந்த 6 பேர் கும்பல், ‘நாங்கள் திரிபுரா போலீசார், ஒரு வழக்கு தொடர்பாக உங்களிடம் விசாரிக்க வேண்டும், காரில் இன்ஸ்பெக்டர் உள்ளார்’ என  கூறி அழைத்தனர். காரின் அருகே சென்றதும், அவரை குண்டுகட்டாக  தூக்கி போட்டு கருப்பு துணியால் கண்களை கட்டினர். கார் மின்னல் வேகத்தில் பறந்தது. துப்பாக்கியால் மிரட்டுவது போன்று பாசாங்குக்காக கையை தலையில் வைத்து, ‘ரூ.5 லட்சம் வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்’ என்றனர்.

இதனால் பயந்துபோன முகமது அன்வர் உசேன், ‘அவ்வளவு பணம் இல்லை. ரூ.90 ஆயிரம் மட்டுமே உள்ளது.  வங்கி ஏடிஎம் மையத்தில் இருந்து எடுத்து தருகிறேன். என்னை விட்டு விடுங்கள்’ என்று கதறியுள்ளார். உடனே ஒரு ஏடிஎம் அருகே காரை நிறுத்தி அழைத்து சென்றனர். ரூ.90 ஆயிரம் எடுத்து கொடுத்தார். பின்னர், மீண்டும் காரில் ஏற்றி கொண்டு, தாழம்பூர் பகுதியில் இறக்கிவிட்டு தப்பினர். இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் முகமது அன்வர் உசேன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து  சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண்ணை வைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், கேளம்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும்படியான காரை மடக்கி, அதில் இருந்தவர்களை போலீசார் விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். தீவிர விசாரணையில்,  திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அல்காஸ்மியா (32), ஜலீல்மியா (23), பெர்வெஜ் மியா (26) என்பதும், வசதியானவர்களை குறிவைத்து பணம் பறித்ததும் தெரிந்தது. அந்த வகையில்தான் முகமது அன்வர் உசேனை கடத்தி பணம் பறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும்  திரிபுராவுக்கு தப்பிய 3 பேரை பிடிக்க விரைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: