திருப்பத்தூர் மாவட்டத்தில் ₹12 கோடி மதிப்பில் 935 பேருக்கு நலதிட்ட உதவிகள்-அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் வழங்கினர்

ஆம்பூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 935 பேருக்கு நேற்று பல்வேறு துறைகளின் சார்பில் ₹12 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கதிர் ஆனந்த் (வேலூர் தொகுதி), அண்ணாதுரை (திருவண்ணாமலை தொகுதி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி அனைவரையும் வரவேற்றார். ஆம்பூர் நகராட்சி தலைவர் ஏஜாஸ் அஹ்மத், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன், தேவராஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர், தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பேசினார்கள். இவர்களில் அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது கூறியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் ₹12 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக தனது பணியை சிறப்புடன் செய்து வருகிறார். தொப்புள் கொடி உறவுகளான இலங்கை வாழ் தமிழர் நலன் காக்க தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக ₹3500 கோடி நிதியில் அவர்களூக்கான குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் ஆம்பூர் தொகுதியில் உள்ள மின்னூர், சின்னபள்ளி குப்பம் ஆகிய இடங்களில் 160 குடும்பத்தினருக்காக ₹8 கோடி மதிப்பில் வீடுகள் கட்ட அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூரில் ₹56 கோடி, வாணியம்பாடியில் ₹25 கோடி, ஆம்பூரில் ₹25 கோடி என மொத்தம் ₹106 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனையை நவீனமாக கட்டிட தமிழக முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார். மாதனூர் பாலாற்றில் குடியாத்தம் செல்லும் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி ₹30 கோடி மதிப்பில் இரு மாத காலத்தில் பணிகள்  துவங்கபடும். பச்சகுப்பத்தில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.  ஊரக சாலைகள் திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டில் இந்த பணிகள் செயல்படுத்தபடும்.

ஆறு ஆண்டுகளாக பணி நின்ற நிலையில் உள்ள வளையாம்பட்டு ரயில்வே மேம்பால பணிகள் 10 கோடி மதிப்பில் மீண்டும் துவங்கப்பட உள்ளது., இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வராசு, மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், ஆம்பூர் நகராட்சி துணை தலைவர் எம்.ஆர்.ஆறுமுகம், மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன், தாசில்தார்கள் அனந்தகிருஷ்ணன், மகாலட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வாணியம்பாடி ஆர்டிஓ பிரேமலதா நன்றி கூறினார்.

Related Stories: