திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் கடத்தி 3 மாநில கூலிப்படையை ஏவி பாஜ பிரமுகர் வெட்டி கொலை: சொத்து பிரச்னையால் பயங்கரம்; பைனான்சியர் உட்பட 6 பேர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு காரில் கடத்தி, 3 மாநில கூலிப்படையை ஏவி பாஜ பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பைனான்சியர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் களிகண்ணன் (45). இவருக்கு உஷா என்ற மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2016ல் பாஜவில் இணைந்து நகர துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். கருத்து வேறுபாட்டால் மனைவி குழந்தைகளை பிரிந்து, திருப்பத்தூர் செட்டி தெருவில் உள்ள ஒரு மேன்ஷனில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

பின்னர் வாட்டர் கேன் சப்ளை செய்வது மற்றும் தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுக்கும் வேலை செய்து வந்தார். இதுதவிர, திருப்பத்தூர் பகுதிகளில் பைனான்ஸ் தொழிலும் செய்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரி(23) பைனான்சியர். இருவருக்கும் கடந்த 2016ல் சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்த முன்விரோதத்தால், 2016லேயே களிகண்ணனை, கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக ஹரி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ஹரி, களிகண்ணனை தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் காரில், அவர் தங்கியிருந்த மேன்ஷனுக்கு 6 பேர் கொண்ட கும்பல் சென்று அவரை சரமாரியாக தாக்கி காரில் கடத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அரூர் செல்லும் சாலையில், களிகண்ணனை வெட்டி கொலை செய்து ஜல்லி மெஷின் அருகே வீசிவிட்டு தப்பினர். இதுபற்றி ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, காரில் கடத்தி சென்றதும், ஊத்தங்கரையில் கொலை செய்து சடலத்தை வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து,  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பதுங்கியிருந்த  ஹரி உட்பட 6 பேர் கும்பலை போலீசார் பிடித்து, ஊத்தங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஹரி சொத்து பிரச்னைக்காக தமிழகம், கேரளா, ஆந்திரா என 3 மாநிலங்களைச் ேசர்ந்த கூலிப்படையை ஏவி, கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து கத்தி, கார் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: