சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளை இடம் மாற்ற கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ராஜா, மூத்த நீதிபதி வி.எம்.வேலுமணி உட்பட 7 பேரை இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கடந்த மாதம் கொலீஜியம் கூட்டம் நடந்தது. இதில் சென்னை, கர்நாடகா உள்பட 6 மாநிலங்களின் நீதிபதிகள், தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.முரளிதரை தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது.  

இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உள்பட 3 மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை தவிர்த்து மற்றவைகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருக்கும் டி.ராஜாவை குறித்து எந்த ஒப்புதலும் வழங்கவில்லை. இதையடுத்து, கடந்த 17ம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டம் நடந்த போது, ஒரு சில நீதிபதிகள் வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் 7 நீதிபதிகளை பல்வேறு மாநிலங்களுக்கு மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் டி.ராஜாவை ராஜஸ்தான் மாநில நீதிபதியாகவும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வி.எம்.வேலுமணியை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதே போல் ஆந்திராவை சேர்ந்த  நீதிபதி பட்டுதேவானந்தை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரமேஷ், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும், தெலங்கானா நீதிபதி லலிதா கனகேந்தி, கர்நாடகா உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி டி.நாகார்ஜூன் சென்னை உயர்நீதிமன்றத்துக்கும், நீதிபதி அபிசேக் ரெட்டி பாட்னா உயர்நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உள்ளது. இரண்டு மூத்த நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் வேறு மாநிலத்தில் இருந்து 2 நீதிபதிகள் இங்கு வருவதால் இந்த  எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. நீதிபதிகளாக நியமிப்பதற்கு சென்னையை சேர்ந்த  பல வக்கீல்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். ஆனால் அது பற்றி ஒன்றிய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Related Stories: