எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற வழக்கு, பாஜக தேசிய பொதுச்செயலாளருக்கு ‘லுக்அவுட்’ நோட்டீஸ்: தெலங்கானா போலீஸ் நடவடிக்கை

ஐதராபாத்: தெலங்கானானில் ஆளும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், துஷார் வெள்ளப்பள்ளி, ஜக்குசாமி ஆகியோருக்கு எதிராக போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில், மேற்கண்ட மூன்று பேருக்கும் எதிராக தெலங்கானா காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் மூவரும் விசாரணைக்கு ஆஜராகாததால் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பி.எல்.சந்தோஷ், துஷார் வெள்ளப்பள்ளி, ஜக்குசாமி ஆகிய மூன்று பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் காவல்துறை முன் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது’ என்றனர். முன்னதாக இந்த வழக்கில் பாஜகவை சேர்ந்த ராமச்சந்திர பார்தி, நந்தகுமார், சிம்மயாஜி சுவாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: