தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 நக்சல்கள் சுட்டுக் கொலை; ஜார்கண்ட்டில் அதிரடி

ராஞ்சி: ஜார்கண்ட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 3 நக்சல்களை போலீசார் அதிரடியாக என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். ஜார்கண்ட் மாநிலம் லதேஹார் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தனிப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்த போலீசாரை நோக்கி நக்சல் கும்பல் தாக்குதல் நடத்தியது. அதற்கு போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியதில் மூன்று நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து  லதேஹார் எஸ்பி அஞ்சனி அஞ்சன் கூறுகையில், ‘ஜார்கண்ட் ஜன்முக்தி பரிஷத் (ஜேஜேஎம்பி) தலைவர் பப்பு லோஹ்ரா மற்றும் அவனது இரண்டு குழுவினர் இணைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.

அதையடுத்து வனப்பகுதியில் 2 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தின. அப்போது ஏற்பட்ட மோதலில் ஜேஜேஎம்பி அமைப்பைச் சேர்ந்த 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் உட்பட ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே கும்லா மற்றும் சிம்தேகா எல்லையில் பதுங்கியிருந்த மூன்று நக்சல்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரண்டு துப்பாக்கி தோட்டாக்கள், பைக், 8 செல்போன்கள் மீட்கப்பட்டன’ என்றார்.

Related Stories: