பாஜக பிரசாரத்துக்கு சிறுமியை பயன்படுத்திய விவகாரம்ராகுல் செய்தால் தப்பு... நீங்க செய்தால் சரியா?மோடியை விமர்சிக்கும் காங். தலைவர்கள்

அகமதாபாத்: தேர்தல் பிரசாரத்திற்காக சிறுமியை பிரதமர் மோடி பயன்படுத்தியது தவறு என்றும், இதனை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் கவனிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கோரியுள்ளனர். குஜராத் சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிய நிலையில், முதற்கட்ட தேர்தல் பிரசாரமும் தீவிரமடைந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தனது முழு பலத்தையும் காட்டி பிரசாரம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், பிரதமர் மோடியின் அருகில் நின்றிருக்கும் சிறுமி ஒருவர், தனது குஜராத்தி மொழியில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த சிறுமி மோடியையும், பாஜகவையும் புகழ்ந்து பேசியுள்ளார்.

சிறுமியின் கழுத்தில் பாஜகவின் அடையாள சின்னத்துடன் கூடிய துப்பட்டா இருந்தது. ராமர் கோயில் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அந்த சிறுமி பேசியதை, பிரதமர் மோடி அருகில் அமர்ந்து ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் சிறுமி அணிந்திருந்த துப்பட்டாவில், அவர் தனது கையெழுத்து போட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகும் நிலையில், பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கன்னையா குமார் உள்ளிட்டோர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், ‘தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி சிறுமியை பயன்படுத்துவது தவறு; நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, சிறுவர்களுடன் நடைபயணம் மேற்கொண்டதை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை கமிஷனிடம் பாஜக புகார் செய்தது. தற்போது பிரதமர் மோடி, சிறுமியை தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார். இதனை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் பார்க்குமா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories: