மதுரை நகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 4,000 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து-அதிரடி தொடரும் என போலீசார் எச்சரிக்கை

மதுரை : மதுரையில் 2022ல் தற்போது வரை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 4000க்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விதிமீறுபவர்கள் மீது ஓட்டுநர் உரிம ரத்து நடவடிக்கை தொடரும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

மதுரை நகரில் விபத்துக்களை குறைக்கும் வகையில், போதையில் வாகனங்கள் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல், அளவுக்கு மீறி லோடு ஏற்றுதல் ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட சில போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஓட்டுநர் உரிமங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாயிலாக ரத்து செய்வதற்கு போலீசார் பரிந்துரைப்பது அதிகரித்துள்ளது. வாகனச் சோதனைகளும் தொடர்ந்து நகரில் கூடியுள்ளது. 2020ல் மதுரை நகரில் மட்டும் 5000, 2021ல் 5400, 2022ல் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘‘கடந்த சில மாதத்திற்கு முன்பு தான் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக அபராத தொகை வசூலிக்க, இ-சலான் இயந்திரம் அறிமுகம், மேலும் நகரில் பூமார்க்கெட் உள்ளிட்ட 3 இடங்களில் அபராத தொகையை நேரடியாக செலுத்தும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும் மதுரை நகரில் 14 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசாரிடமும் இ-சலான் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலமே விதிமீறல் தொடர்பான அபராத தொகை ஏடிஎம், கிரெடிட் கார்டுகள் வாயிலாக வசூலிக்கிறோம்.

கார்டு வசதி இல்லாதவர்களுக்கு ஆன்லைன் ரசீது வழங்கப்படுகிறது. போலீசாரின் நேரடி மையங்கள், எஸ்பிஐ வங்கியில் அபராத தொகையை செலுத்தலாம். குறிப்பிட்ட நாள் அவகாசம் கொடுப்பதால் பலர் அபராத தொகை செலுத்துவதில்லை. இச்சூழலில் ஹெல்மெட் அணிவதும் குறைவது தெரிகிறது. எனவே, அபராதத் தொகையைத் துரிதமாக வசூலிக்கவும், ஆன்லைனில் சம்பந்தப்பட்டவரின் பிற பரிவர்த்தனைக்கு தடை ஏற்படுத்தும் வகையிலும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது உட்பட குறிப்பிட்ட சில குற்றச்செயல் புரிவோரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட வகையில் கடந்த 2 மாதத்தில் மட்டுமே 1200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இவர்களின் அசல் உரிமம் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்து அதிகரிக்கும்’’ என்றனர்.

சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை நகரில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், கோரிப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பஸ் ஸ்டாப்களில் பயணிகளுக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்திக் கொண்டு விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் அதிவேகமாக ஆட்டோக்களை ஓட்டுவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

எனவே, அதிவேக வாகன ஓட்டுனரின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும். ஆட்டோக்களை பறிமுதல் செய்யவேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்களில் அதிவேகமாக செல்லும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டூவீலர்களில் வரும் நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பது போல் ஆட்டோ ஓட்டுனர்களில் விதி மீறல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

கால்நடைகளால் அடிக்கடி விபத்து

மதுரை நகரில் நள்ளிரவில் மாடுகளை அவிழ்த்து விடும் கால்நடைகளின் உரிமையாளர்களை போலீசார் கண்டு கொள்வதில்லை. இரவு நேரங்களில் அதிகளவு கால்நடைகள் சாலையில் படுத்திருப்பதால் டூவீலர் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயங்களுடன் செல்கின்றனர். மேலும் நான்கு மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டிகளும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலையில் கால்நடைகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Related Stories: