தாம்பரம்: ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தை, தாம்பரம் துணை ஆணையரின் எச்சரிக்கையை மீறி வைத்தனர். இதனால், தாம்பரம் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடி படத்தை வைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு தாம்பரம் மண்டல தலைவர் கணேஷ் தலைமையில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராஜாதி உட்பட 50க்கும் மேற்பட்டோர் நேற்று தாம்பரம் காவல் நிலையத்திற்கு சென்று அனுமதி கேட்டனர்.
அப்போது, மோடியின் படத்தை ரேஷன் கடையில் வைக்க அனுமதி இல்லை என தாம்பரம் காவல் துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது எச்சரிக்கையும் மீறி, காவல் நிலையத்தில் இருந்து நேரடியாக தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 33வது வார்டுக்கு, கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்ற பாஜவினர் கடப்பேரி, எம்இஎஸ் சாலையில் உள்ள 11 மற்றும் 12ம் ரேஷன் கடைகளின் முகப்பில் பிரதமர் மோடியின் படத்தை ஆணி அடித்து மாட்டினர்.ரேஷன் கடைகளில் மோடி படத்தை வைக்க ஊர்வலமாக பாஜவினர் வந்ததால் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.