ராமஜெயம் கொலை வழக்கு 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி: 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு விவகாரத்தில், 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கி, 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வு போலீசார் திட்டமிட்டு சம்மன் அனுப்பினர். கடந்த 14ம் தேதி திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்பு, ரவுடிகள் 8 பேர் ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். ரவுடி தென்கோவன்(எ) சண்முகம் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அதே நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்பு, 17ம் தேதி மேலும் 5 ரவுடிகள் உண்ைம கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 11 ரவுடிகளுக்கு இரண்டு கட்டமாக திருச்சி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. ரவுடி கடலூர் லெப்ட் செந்திலுக்கு கடலூரில் உடல் பரிசோதனை நடந்தது. இதைத்தொடர்ந்து, 6வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்பு, நேற்று 10 ரவுடிகள் தங்களது வக்கீல்களுடன் ஆஜராகினர். 2 பேர் மட்டும் ஆஜராகவில்லை. தொடர்ந்து, 12 ரவுடிகளின் உடல் முழு மருத்துவ பரிசோதனை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார். இது தொடர்பாக, 2 மாதத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். ரவுடி தென்கோவன்(எ) சண்முகம் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு செல்ல தேவையில்லை எனக்கூறி இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதி சிவகுமார் ஒத்திவைத்தார்.

Related Stories: