ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் பதவியேற்ற 3 வருடங்களில் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியுள்ளார்-அரசு ஆசிரியர்கள் சங்க எம்எல்சி வேட்பாளர் குற்றச்சாட்டு

சித்தூர் :  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பதவியேற்ற மூன்று வருடங்களில் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியுள்ளார் என அரசு ஆசிரியர் சங்க எம்எல்ஏ வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். சித்தூரில் ஆசிரியர்கள் சார்பில் போட்டியிடும் எம்எல்சி வேட்பாளர் பாபு ரெட்டி தலைமையில் சித்தூர் மாவட்ட யுடிஎப் அரசு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் எஸ்டியூ அரசு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், அவர் பேசியதாவது:

 

சித்தூர் மாவட்டத்தில் அரசு ஆசிரியர்களின் எம்எல்சி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். அதேபோல் பட்டதாரிகளின் எம்எல்சி வேட்பாளராக வெங்கடேஸ்வர் ரெட்டி போட்டியிடுகிறார். எனவே. அரசு ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் எங்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தற்போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறேன். இதில் அரசு ஆசிரியர்களுக்கு மாநில அரசு செய்யும் துரோகங்கள் குறித்து ஆசிரியர்களிடையே எடுத்துக்கூறி வருகிறேன்.

மாநில முதல்வர் ஜெகன் மோகன் ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளை கார்ப்பரேட் பள்ளிகளுக்கு இணையாக மாற்றுவதாக தெரிவித்து வருகிறார். ஆனால் அவருடைய ஆட்சியில் இதுவரை ஏராளமான பள்ளிகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. பல ஆயிரம் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்ப வில்லை. ஏராளமான பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் எவ்வாறு கற்றுத் தர முடியும்.

நான் எம்எல்சியாக வெற்றி பெற்ற பிறகு ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பாடத்திற்கு ஒவ்வொரு ஆசிரியரை அமைக்க வலியுறுத்துவேன். அதேபோல் ஆசிரியர்களுக்கு பணி சுமையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். முதல்வர் ஜெகன்மோகன் ஆசிரியர்களின் பிஎப் நிதியை பல ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி உள்ளார். தற்போது ஆசிரியர்களின் குடும்பத்தில் ஏதாவது பிரச்னை அல்லது அவர்களின் பிள்ளைகள் மேற்படிப்பு படிக்க நிபு உதவி உள்ளிட்டவைக்கு பிஎப் நிதியை நாடுகிறார்கள். ஆனால் அந்த பிஎப் நிதி இல்லாதது அரசு ஆசிரியர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல் முதல்வர் ஜெகன்மோகன்  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஜாப் காலண்டர் வெளியிடப்படும் என தெரிவித்தார். ஆனால் அவர் முதலமைச்சராக பதவியேற்ற மூன்று வருடங்களில் ஒரே ஒரு முறை மட்டும் ஜாப் காலண்டர் அறிவித்தார். அதில், ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கி உள்ளார். அவர் தேர்தலின் போது 12 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே பணி வழங்கி உள்ளார்.  

இவை அனைத்தையும் நான் வெற்றி பெற்ற பிறகு அரசை கேள்வி கேட்டு அரசு ஆசிரியர்களுக்காக பாடுபடுவேன். எனவே, அடுத்த ஆண்டு நடைபெறும் எம்எல்சி தேர்தலில் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் எனக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதேபோல் அந்தந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் பட்டதாரிகளிடம் சென்று யுடிஎப் சங்கம் சார்பில் போட்டியிடும் பட்டதாரிகள் வாக்களிக்கும் எம்எல்சி வெங்கடேஸ்வர் ரெட்டியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பட்டதாரிகளுக்காக மற்றும் அரசு ஆசிரியர்களுக்காக நாங்கள் முன் நின்று அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஏற்படுத்தித் தருவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் யுடிஎப் மாநில செயலாளர் ரகுபதி, சித்தூர் மாவட்ட பொதுச்செயலாளர் ரமணா உள்பட யுடிஎப் மற்றும் எஸ்டியு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: