ஆதார் எண் இணைத்தால்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது தவறான பிரசாரம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவை: ஆதார் எண் இணைத்தால் தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பது தவறான பிரசாரம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவையில் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு என்பது நிர்வாக ரீதியில் நடந்து வரும் ஒரு செயல். இது, ரெகுலர் பணி. இதற்கும் இலவச மின்சார விநியோகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. விவசாயிகளுக்கு, விசைத்தறி நெசவாளர்களுக்கு, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் எப்போதும்போல் தொடரும்.

ஆதார் எண்ணை இணைத்தால்தான் இலவச மின்சாரம் வழங்கப்படும் என சிலர் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இதை, யாரும் நம்ப வேண்டாம். இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது. தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகுதான் இப்பணி வேகம் எடுத்துள்ளது. இதேபோல், கோவைக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ, அதை அறிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். இவ்வாறு செந்தில்பாலாஜி கூறினார்.

Related Stories: