சிறையில் அமைச்சருக்கு மசாஜ் விவகாரம்: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்.! நாளைக்குள் பதிலளிக்க உத்தரவு

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் சம்பவம் தொடர்பாக அமலாக்கத்துறை நாளைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணமோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ெடல்லி ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் மசாஜ் வீடியோ நேற்று வெளியானது. அந்த வீடியோவில் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் சிலர் மசாஜ் செய்கின்றனர். அவரது கால்களிலும்,  தலையிலும் வலி நிவாரணிகளை தடவி விடுகின்றனர். இந்த வீடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் திங்கள்கிழமை அதாவது நாளைக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சிறையில் இருந்து வீடியோ வெளியானதை அடுத்து, அமலாக்க இயக்குனரகம் மீது சத்யேந்திர ஜெயின் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சத்யேந்தர் ஜெயின் வழக்கு தொடர்பான எந்த தகவலையும் ஊடகங்களில் கசிய விடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அமலாக்கத்துறை சார்பில் சிறையில் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான வீடியோவை கசியவிட்டது. எனவே, அமலாக்க இயக்குனரகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார். அதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி விகாஸ் துல், அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: