ரவுடி கொலையில் ஜாமீனில் வந்து கோர்ட்டில் ஆஜராகாத மற்றொரு ரவுடி கைது: புழல் சிறையில் அடைப்பு

அண்ணாநகர்: யார் தாதா என்ற போட்டியில், பிரபல ரவுடியை கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வந்துவிட்டு தலைமறைவாக சுற்றிய மற்றொரு  ரவுடியை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவின் பேரில், அவரை சிறையில் அடைத்தனர். சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் என்ற பல்லு சதீஷ் (27). சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இருவரும் ரவுடிகள். இவர்களிடையே யார் தாதா என்பது தொடர்பாக, முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு கோயம்பேட்டில் சுற்றித் திரிந்த  ரவுடி சுரேஷை, சதீஷ் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

இதுதொடர்பாக, கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு சதீஷை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ரவுடி சதீஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். கடந்த 6 மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ரவுடி சதீஷ் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து, அவரை கைது செய்து ஆஜர்படுத்தவேண்டும் என்று கோயம்பேடு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.  இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் ரவுடி சதீஷ் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: