டிவிட்டரை பயன்படுத்த டிரம்ப்புக்கு விதித்த தடையை நீக்கலாமா? மக்களிடம் மஸ்க் கருத்து கணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்,  டிவிட்டரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கலாமா? என்பது குறித்து, மக்களிடம் எலான் மஸ்க் கருத்து கேட்டுள்ளார். அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், கடந்த 2020ம் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு பைடனிடம் தோற்றார். இத்தேர்தலில் முறைகேடு நடந்து விட்டதாக கூறி, பைடனின் வெற்றியை அவர் ஏற்க மறுத்தார். மேலும், தேர்தல் முறைகேட்டை கண்டித்து நாடாளுமன்றம் அருகே குடியரசு கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து, நாடாளுமன்றம் தாக்கப்பட்டது.

டிரம்ப்தான் இதை தூண்டி விட்டதாக குற்றம்சாட்டிய டிவிட்டர் நிர்வாகம், அவர் டிவிட்டரை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. தற்போது, டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், டிரம்ப் மீதான தடையை நீக்கலாமா? என்பது குறித்து மக்களிடம் மஸ்க் கருத்து கேட்டுள்ளார். நேற்று மாலையுடன் முடிந்த 12 மணி நேரத்தில், டிரம்ப்புக்கு ஆதரவாக 20 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பின் முடிவு டிரம்ப்புக்கு சாதகமாக இருந்தால், அவர் மீதான தடையை மஸ்க் நீக்குவார் என கருதப்படுகிறது.

* ஊழியர்களுக்கு 2 மணி வரை கெடு

டிவிட்டரை வாங்கிய பிறகு, அதில்  பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் 50 சதவீதம் பேரை மஸ்க் நீக்கினார். மேலும், இருக்கும் ஊழியர்களையும் பல மணி நேர கடின வேலையை கொடுத்து கசக்கி பிழிகிறார். இதனால், நேற்று முன்தினம் மட்டுமே அமெரிக்காவில் 1,200 ஊழியர்கள் ராஜினாமா செய்தனர். இதனால், டிவிட்டர் அலுவலகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் எரிச்சல் அடைந்துள்ள மஸ்க், டிவிட்டர் பொறியாளர்கள் அனைவரும் நேற்று மதியம் 2 மணிக்குள் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: