தகவல் பாதுகாப்பு வரைவு மசோதா வெளியீடு சட்டத்தை மீறினால் ரூ.500 கோடி அபராதம்: மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

புதுடெல்லி: தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மீறினால், சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என வரைவு மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தளங்களில் தனிநபர் தகவலை பாதுகாக்கும் வகையில், தனிநபர் பாதுகாப்பு மசோதாவை கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் தனிநபர் தகவல்களை பாதுகாப்பதை உறுதி செய்வதற்கு பதிலாக, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், நாடாளுமன்ற கூட்டுக்குழு மசோதாவில் 81 திருத்தங்கள் செய்ய முன்மொழிந்த நிலையில், மசோதாவை கடந்த ஆகஸ்ட்டில் அரசு திரும்பப் பெற்றது.

இந்நிலையில், புதிய திருத்தங்களுடன் தனிநபர் தகவல் பாதுகாப்பு வரைவு மசோதாவை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டார்.

இதில் கூறப்பட்டுள்ளதாவது:

* தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தகவல் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்படும்.

* தகவல் பாதுகாப்பு சட்டங்களை மீறும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். அத்தகவல்களை செயலாக்கம் செய்யும் துணை நிறுவனத்திற்கும் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும். (முந்தைய சட்டத்தில், அதிகபட்ச அபராதம் ரூ.15 கோடி அல்லது நிறுவனத்தின் உலகளாவிய வருவாயில் 4 சதவீதமாக இருந்தது)

* இதே போல தகவல் மீறல் குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனம் ஆணையத்திற்கோ, சம்மந்தப்பட்ட தகவல் உரிமையாளருக்கோ தகவல் தெரிவிக்க தவறினால் ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்படும்.

* தனிநபர்களின் தகவல்களை நிறுவனங்கள் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகவும், வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும். தகவல் சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும்.

* ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்குத் தேவையான தனிப்பட்ட தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா குறித்து வரும் டிசம்பர் 17ம் தேதி வரை பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: