பெண் தலைமை தேர்தல் ஆணையர் ஏன் இல்லை?..தேர்தல் ஆணையத்திற்கு பெண் ஆணையர்கள் நியமனம் முக்கியமானது: உச்சநீதிமன்றம்

டெல்லி: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஒரு பெண் தலைமை தேர்தல் ஆணையரை கூட தேர்வு செய்ய இயலவில்லையா என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை சுதந்திரமான முறையில் தேர்வு செய்ய உத்தரவிடக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

அப்போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த நடைமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள் என்று ஒன்றிய அரசை நீதிபதிகள் கேட்டனர். இந்த நியமனத்திற்கு எந்த அளவுகோல் பின்பற்றப்படுகிறது என்றும் கேள்விகளை தொடுத்தனர்.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஒரு பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் கூட நியமிக்கப்படாமல் இருப்பது நெருடலை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு சுதந்திரமான மற்றும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை போன்று பெண் ஆணையர்கள் நியமனமும் முக்கியமானது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஆனால் ஒன்றிய அரசு சார்பில் எந்த விளக்கமும் அளிக்காததால் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் எந்தவொரு இயங்கு அமைப்பும் இல்லாமல் சொந்த நடைமுறையையே பின்பற்றுகிறீர்கள் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு முறையை ஒன்றிய அரசு கேள்வி எழுப்பி அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சூழலில் பெண் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து ஒன்றிய அரசை நீதிபதிகள் கேள்விகளால் துளைத்துள்ளனர்.

Related Stories: