உலக கோப்பை கால்பந்து தொடரில் பட்டம் வெல்வது மிகவும் கடினம் ஆனால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்: போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ பேட்டி

தோகா: 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் அரபு நாடான கத்தாரில் வரும் 20ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடக்கிறது. 32 அணிகள் பங்கேற்கின்றன. இவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் 16 அணிகள் நாக்அவுட் என்ற 2வது சுற்றுக்குள் நுழையும். இந்த தொடரில் போர்ச்சுக்கல் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையில் களம் இறங்குகிறது. எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போர்ச்சுக்கல் தனது முதல் போட்டியில் வரும் 24ம் தேதி கானாவுடன் மோத உள்ளது. இந்நிலையில் போர்ச்சுக்கல் அணி கேப்டன் ரொனால்டோ அளித்துள்ள பேட்டி: நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

எங்களிடம் ஒரு அற்புதமான பயிற்சியாளர் இருக்கிறார், எங்களிடம் ஒரு நல்ல தலைமுறை கால்பந்து வீரர்கள் உள்ளனர். நாங்கள் ஒரு அற்புதமான உலகக் கோப்பைக்கு செல்கிறோம் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். பட்டம் வெல்வது கடினமாக இருக்கும். ஆனால் எல்லாம் சாத்தியம், நிச்சயமாக நாங்கள் போட்டியிடப் போகிறோம். பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா, ஜெர்மனி மற்றும் பிரேசில் போன்ற அணிகள் வலுவாக உள்ளன. இதனால் பட்டம் வெல்வது மிகவும் கடினம் என்று தனக்குத் தெரியும், என்றார். 37 வயதான ரொனால்டோ 40 வயதில் ஓய்வுபெற திட்டமிட்டுள்ளதால் கத்தார் தனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று கூறினார்.

நான் இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள் அதிகபட்சமாக விளையாட விரும்புகிறேன். நான் 40ல் முடிக்க விரும்புகிறேன், அது ஒரு நல்ல வயதாக இருக்கும். ஆனால் எனக்கு தெரியாது. சில நேரங்களில் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக ஒரு விஷயத்தைத் திட்டமிடுகிறீர்கள், நான் பலமுறை சொன்னது போல், வாழ்க்கை மாறும், என்றார். அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியைப் பற்றி கூறிய ரொனால்டோ, 16 ஆண்டுகளாக அவருடன் உலக அரங்கில் விளையாடி வருகிறேன். அவர் மேஜிக், சிறந்த மற்றும் ஒரு அணித் துணையைப் போன்றவர், என்றார்.

போர்ச்சுக்கல் அணி இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. ஆனால் தனது கடைசி வாய்ப்பில் போர்ச்சுகல் கேப்டனாக 2022 கத்தாரில் அணி தனது முதல் உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறார். இதனிடையே நேற்று லிஸ்பனில் நடந்த பயி்ற்சி போட்டியில் போர்ச்சுக்கல் அணி 4-3 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியுடன் போர்ச்சுக்கல் அணி இன்று கத்தார் புறப்படுகிறது.

Related Stories: