தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்-வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி விளக்கம்

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் தற்பொழுது வரும் கார்த்திகை பட்டம் நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு உகந்த தருணம். ஆகவே நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் மழை நின்ற பின் வயலை நன்கு புழுதி உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு ஒரு கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸ், ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி மற்றும் இரண்டு கிலோ ரைசோபாஸ்யை ஒன்றாக கலந்து ஒரு வாரம் நிழலில் கோணிப்பை கொண்டு ஈரப்பதத்துடன் மூடி பின்னர் அடியுரமாக இட வேண்டும்.

அவ்வாறு செய்ய இயலாத விவசாயிகள் விதை நேர்த்தி செய்தாவது விதைக்க வேண்டும். இதனால் நிலக்கடலையில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தலாம். ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு 10 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸ் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பாக்டீரியல் நோய்களான இலைக்கருகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தலாம். அடுத்து டிரைகோடெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் பூஞ்சான நோய்களான வேரழுகல் மற்றும் வேர்க்கரையான் நோயை கட்டுப்படுத்தலாம்.

உயிரியல் நோய் எதிர்ப்பார்ப்பு காரணிகளான பேசில்லஸ் மற்றும் டிரைக்கோடெர்மா உடன் உயிர் உரங்களையும் கலந்து பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ரைசோபியம் என்ற உயிரி உரம் நிலக்கடலையின் வேர்களில் வாழ்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைப்படுத்துகிறது. அதேபோன்று பாஸ்போ பாக்டீரியம் என்ற நுண்ணுயிரி மண்ணில் உள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது.

அது மட்டுமின்றி வேர்கள் செழித்து வளரவும் திசுக்கள் வளம் பெற்று பயிர் நன்றாக வளருவும் வழிவகை செய்கிறது. 200 கிராம் உயிர் உர கலவையான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியத்தை ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.இவ்வளவு உயிர் உரங்களை பயன்படுத்துவதால் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு ரசாயன உரங்களின் அளவை 25 சதவீதம் குறைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமின்றி 10 லிருந்து 15 சதவீதம் பயிர் விளைச்சலை அதிகரிக்க செய்கிறது.

இந்த உயிரி உரங்கள் மற்றும் உயிரி எதிரி காரணிகள் நமது கிரீடு வேளாண் அறிவியல் மையம் சோழமாதேவியில் விற்பனை செய்யப்படுகிறது என வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் தெரிவித்தார்.

Related Stories: