ஆந்திர மாநிலத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டி-குண்டூரில் தொல்.திருமாவளவன் பேச்சு

சித்தூர் : ஆந்திராவில் வருகிற சட்டமன்ற தேர்தலில் விசிக போட்டியிடும் என்று குண்டூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் ேபசினார்.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பொன்னூரில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அவர் பேசியதாவது:

 

குண்டூரில் எஸ்சி வகுப்பை சேர்ந்த அஞ்ஜி தர்ணா பாசுவை கடந்த மாதம் அரிசி வியாபாரிகள் சிலர் மச்சிலி பட்டினம் பகுதியில் கொலை செய்து உடலை கடலில் வீசியுள்ளனர். சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அரிசி வியாபாரிகள் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையறிந்து அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினோம்.

எஸ்சி வகுப்பை சேர்ந்தவர் வியாபாரம் செய்வது குற்றமா. அவரது வியாபாரம் சிறப்பாக நடைபெற்றதால் அனைத்து அரிசி வியாபாரிகள் ஒன்று சேர்ந்து அவரை கொலை செய்து கடலில் வீசியுள்ளனர். எனது கட்சி எப்போதுமே அஞ்ஜி தர்ணா பாசு குடும்பத்திற்கு உறுதுணையாக நிற்கும். கொலை செய்த அரிசி வியாபாரிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இல்லையென்றால் ஆந்திர மாநிலத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஆந்திர மாநிலத்தில் வருகிற 2024ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம். எங்கள் கட்சியில் இடதுசாரி கட்சிகள் வந்தால் அதை நாங்கள் வரவேற்போம். அவர்களுடன் சேர்ந்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.

இவ்வாறு, அவர் பேசினார். இதில் மாநில விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் வித்யாசாகர், பொது செயலாளர் சிவப்பிரசாத், செயலாளர் பிரபு, துணை செயலாளர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: