தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரருக்கு உரிய நேரத்தில் தகவல்களை வழங்க வேண்டும்-மாநில தகவல் ஆணையர் பேச்சு

திருப்பதி : தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரருக்கு உரிய நேரத்தில் தகவல்களை வழங்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையர் ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.

திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில தகவல் ஆணையர் ஹரி பிரசாத் தலைமை தாங்கினார். கலெக்டர் வெங்கடமரணா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் ஹரி பிரசாத் பேசியதாவது: அனைவரும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து முழுமையான புரிதல் பெற்றிருக்க வேண்டும்.  அதிகாரிகளின் அலுவலகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளை குறியீட்டின்படி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆர்டிஐ இணையதளங்களில் உள்ள தகவல்களை பிரிவு  4ன் படி அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். விண்ணப்பதாரருக்கு கோரப்பட்ட தகவல்களை விரைவாக வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. மேல்முறையீட்டு ஆணையத்தின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் இருக்க வேண்டிய தகவல் பலகைகள் ஒவ்வொரு அலுவலகத்தின் முன்பும் வைக்க வேண்டும்.

ஆர்டிஐ விண்ணப்ப கட்டணம் நகர் புறங்களுக்கு ₹10 மற்றும் கிராம புறங்களுக்கு ₹5 ஆகும். விண்ணப்பதாரருக்கு ரசீது கொடுக்க வேண்டும். விண்ணப்பதாரரின் தகவல் உங்கள் வரம்பிற்குள் இல்லை என்றால் 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் தனிப்பட்ட பலன்கள், பாதுகாப்பு, நிதி, குடும்பம், ஆதார், பான் மற்றும் கொடுக்க கூடாத பிற தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய் துறைகள் தொடர்பாக அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அதற்கான பதிவேடுகள் கிடைக்காததால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Related Stories: