கோழிக்கோட்டில் நிகழ்ச்சி நடத்துவதாக கூறி ரூ.39 லட்சம் மோசடி; பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு எதிரான வழக்குக்கு இடைக்கால தடை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூரை சேர்ந்தவர் ஷியாஸ். பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் உள்பட 3 பேர் மீது எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதில், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக கூறி, சன்னி லியோன் ரூ.39 லட்சம் பணம் வாங்கியதாகவும், ஆனால் ஒப்பந்தத்தின்படி நிகழ்ச்சி நடத்தாமல் ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் நடிகை சன்னி லியோன், அவரது கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி நடிகை சன்னி லியோன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்தது: கோழிக்கோட்டில் நிகழ்ச்சி நடத்துவதாக ரூ.30 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, ரூ.15 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டேன். ஆனால் 3 முறை பல்வேறு காரணங்களை கூறி நிகழ்ச்சியை ஒத்திவைத்தனர்.

முழுப் பணமும் தந்தால் தான் நிகழ்ச்சியை நடத்துவேன் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். இறுதியில் கடந்த 2019ம் ஆண்டு காதலர் தினத்தன்று நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அதன் அமைப்பாளர்கள் உறுதியளித்தனர். ஆனால் பணம் முழுவதுமாக தராதால் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை. நான் அவர்களை ஏமாற்றவில்லை. என்னைத்தான் அவர்கள் ஏமாற்றினர். கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்ததின் மூலம் எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சியாத் ரகுமான், நடிகை சன்னி லியோனுக்கு எதிரான வழக்கு தொடர்பான நடவடிக்கைகளுக்கு டிசம்பர் 1ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: