தேனி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த 182 ஏக்கர் நிலமோசடி வழக்கில் தாசில்தார் கைது

தேனி: தேனி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த 182 ஏக்கர் நில மோசடி வழக்கில், தாசில்தார் கிருஷ்ணகுமார் நேற்று கைதானார். தேனி மாவட்டத்தில் வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான சுமார் 182 ஏக்கர் நிலத்தை அதிமுக ஆட்சி காலத்தில் தனியார் பலருக்கு அப்போதைய அதிகாரிகள் முறைகேடாக பட்டா மாறுதல் செய்தனர்.  

தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நிலமோசடி தொடர்பாக பெரியகுளம் கோட்டாட்சியர்களாக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா, பெரியகுளம் தாசில்தார்களாக இருந்த கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணைத் தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, சர்வேயர்கள் பிச்சைமணி, சக்திவேல், விஏஓ சுரேஷ்குமார், அப்போது அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த ஓபிஎஸ்சின் முன்னாள் உதவியாளர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், அழகர், ரமேஷ்கண்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அன்னப்பிரகாஷ், சர்வேயர் பிச்சைமணி, அழகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர், ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய தாசில்தார் கிருஷ்ணகுமாரை நேற்று  சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவரை, தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில், சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். தாசில்தார் கிருஷ்ணகுமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டதையடுத்து, தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories: