2023 கிராண்ட் ஸ்லாம் அட்டவணை வெளியீடு: ஆஸி. ஓபன் ஜன.16ல் ஆரம்பம்

லண்டன்: 2023ம் ஆண்டில் நடைபெற உள்ள கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களுக்கான போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. வீராங்கணைகளுக்கான டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,  வீரர்களுக்கான ஏடிபி பைனல்ஸ் தொடர் இப்போது நடந்து வருகிறது. உலக தரவரிசையில் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் இந்த தொடருக்கு பிறகு, இந்த ஆண்டில் முக்கியத் தொடர்கள், முன்னணி  ஆட்டக்காரர்கள் பங்கேற்கும் தொடர்கள் ஏதுமில்லை. இனி ஜனவரியில் இருந்துதான் முக்கிய ஆட்டங்கள் தொடங்கி நடைபெறும்.

இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான டென்னிஸ் தொடர்களின் கால அட்டவணை நேற்று வெளியானது. அதன்படி வரும் ஆண்டு ஜன.1ம் தேதியே   முதல் போட்டியாக அடிலெய்டு ஓபன் தொடர் தொடங்க இருக்கிறது. அத்துடன் 4 முக்கிய கிராண்ட் ஸ்லாம் தொடர்களுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. முதல் கிராண்ட் ஸ்லாம்  போட்டியான ஆஸி. ஓபன்  ஜன.16 முதல் ஜன.29ம் தேதி வரை ஆஸ்திரலேியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறும். 2வது கிராண்ட் ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் மே 28 முதல்  ஜூன் 11ம் தேதி வரை பாரிசில் நடக்கும். முக்கிய மற்றும் 3வது கிராண்ட் ஸ்லாம் தொடரான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் ஜூலை 3 முதல் ஜூலை 16ம் தேதி வரை நடக்க உள்ளது.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் ஆக.28ம் தேதி முதல் செப்.10ம் தேதி வரை நியூயார்க் நகரில் நடத்தப்படும். கத்தார், துபாய், மாட்ரிட், இத்தாலி ஓபன், மயாமி, இண்டியன் வெல்ஸ் உள்பட பல்வேறு ஏடிபி, டபுள்யூடிஏ தொடர்களுக்கான  அட்டவணையும் வெளியாகி உள்ள நிலையில், கடந்த செப்டம்பரில் இந்தியாவில் முதல் முறையாக நடந்த சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடருக்கான அட்டவணை இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

Related Stories: