ஈரோடு மாவட்டத்தில் கோயில்களுக்குச் சொந்தமான ரூ.41.35 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகர், அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு காரைவாய்க்கால் மாரியம்மன் திருக்கோயில், மொடக்குறிச்சி வட்டம், குலவிளக்கு கிராமம் அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி வட்டம், நஞ்சை கிளாம்பாடி கிராமம் அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.41 கோடியே 35 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகர், அருள்மிகு பெரிய மாரிமாரியம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு காரைவாய்க்கால் மாரியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 67.96 சென்ட் பரப்புள்ள காலியிடம், அதில் அமைந்துள்ள 2 குடியிருப்புகள் மற்றும் திருமண மண்டபம் ஆகியவை மூன்று நபர்களால் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

மேற்கண்ட ஆக்கிரமிப்பினை அகற்றி திருக்கோயில் சுவாதீனத்தில் கொண்டுவர கோவை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 21.02.2020 ல் திருக்கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி தீர்ப்பினை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்களால் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் திருக்கோயில் சொத்துகளை மீட்டு வருவாய் ஈட்டும் செயல்களை முன்னுரிமை நடவடிக்கையில் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவிடப்பட்டதினை தொடர்ந்து, ஈரோடு இணை ஆணையர் அவர்கள் அறிவுறுத்தலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 90 சதவீத நிலத்தினை தன்வசம் வைத்துள்ள இரண்டு ஆக்கிரமிப்பாளர்கள் சுமூகமான முறையில் திருக்கோயில் வசம் ஒப்படைக்க முன்வந்ததினை தொடர்ந்து திருக்கோயிலுக்கு சொந்தமான காலி நிலம் அதில் அமைந்துள்ள ஒரு திருமண மண்டபம் ஆக மொத்தம் 64.023 சென்ட் இடமானது ஈரோடு உதவி ஆணையர் அவர்களால் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் 10 கோடி ஆகும்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், குலவிளக்கு கிராமம் அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 22.05 ஏக்கர் மற்றும் அருள்மிகு அண்ணமார்சாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 3.30 ஏக்கர் கூடுதல் இனாம் புன்செய் நிலம் 25.35 ஏக்கர் 20 நபர்களால் நீண்டகால ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு , ஈரோடு இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி ஈரோடு உதவி ஆணையர் தலைமையில் இதர துறைகளின் ஒத்துழைப்போடு மேற்கண்ட நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புதார்களை வெளியேற்றி திருக்கோயிலுக்கு சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.25 கோடி 35 இலட்சம் ஆகும்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், நஞ்சை கிளாம்பாடி கிராமம் அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 6.06 ஏக்கர் நிலம்  நீண்ட காலமாக ஆக்கிரமிப்பிலிருந்து வந்தது. ஈரோடு இணை ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஆக்கிரமிப்பாளர் சுமூகமான முறையில் திருக்கோயில் வசம் ஒப்படைக்க முன்வந்ததினை தொடர்ந்து ஈரோடு உதவி ஆணையர் அவர்களால் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.6 கோடி ஆகும்.

ஆகமொத்தம் ஈரோடு மாவட்டத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 3 திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு  ரூ.41 கோடியே 35 லட்சம் ஆகும். இந்நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி, தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) கௌசல்யா, திருக்கோயில் செயல் அலுவலர்கள் கீதா, திரு.சுகுமார், சிவராமசூரியன், யுவராஜ், ஆய்வர்கள் தேன்மொழி, நித்யா, திரு.தினேஷ் குமார், அருண்பாண்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: