கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே முகாமிட்டுள்ள யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி, பனகமுட்லு பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த 12 நாட்களாக மூன்று யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் மூன்று யானைகள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர்.

வனத்துறையினர் அந்த மூன்று யானைகளையும் சானமாவு வனப்பகுதிக்குள் விரட்ட பெரும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த மூன்று யானைகளும் இடம் பெயர்ந்து, கிருஷ்ணகிரி அருகில் உள்ள பைனப்பள்ளி அடுத்த ஜாகீர்மோட்டூர் பகுதிக்கு வந்தன. பின்னர் அங்கிருந்த நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. யானைகள் முகாமிட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவி(42) என்னும் கல் உடைக்கும் தொழிலாளி மது போதையில் யானையின் அருகில் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த யானை, ரவியை தும்பிக்கையால் தூக்கி வீசியுள்ளது. இதில் காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று காலை 10 மணிக்கு வெயில் அடித்ததால், மூன்று யானைகளும் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள கூசுமலை மாந்தோப்பில் முகாமிட்டது. மாவட்ட வனஅலுவலர் கார்த்திகேயனி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி வன அலுவலர் மகேந்திரன், ராயக்கோட்டை வன அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே இன்று காலை 3 யானைகளும் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகேயுள்ள முட்புதர்கள் இடையே முகாமிட்டுள்ளது. அந்த யானைகளை அங்கிருந்து விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: