கல்வியால் மட்டும் தனி அடையாளத்தை பெறவில்லை தெலுங்கு மக்கள் அனைத்து துறைகளிலும் திறமையை வெளிப்படுத்துகின்றனர்-விசாகப்பட்டினம் விழாவில் பிரதமர் மோடி பேச்சு

திருமலை : தெலுங்கு மக்கள் கல்வியால் மட்டும் தனி அடையாளத்தை பெறவில்லை, அனைத்து துறைகளிலும் திறமையை வெளிப்படுத்துகின்றனர் என்று விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக மைதானத்தில் நேற்று முன்தினம் பொருளாதார வழித்தடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்கினார். கவர்னர் விஷ்வபூஷன் ஹரிசந்திரன், முதல்வர் ஜெகன்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விசாகப்பட்டினம் ரயில் நிலையம் ₹460 கோடியில் நவீனமயமாக்கும் பணிகள், ₹3,778 கோடியில் ராய்ப்பூர்- விசாகப்பட்டினம் பொருளாதார வழித்தட கிரீன்பீல்ட் நெடுஞ்சாலை, ₹566 கோடியில் கான்வென்ட் சந்திப்பு முதல் ஷீலா நகர் வரை சாலை, ₹152 கோடியில் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை நவீனமயமாக்கும் பணிகள்,

₹2658 கோடி கெயில் நிறுவனத்தின் கீழ் காகுளம் அங்குல் எரிவாயு குழாய் திட்டம் அமைக்க அடிக்கல், ₹211 கோடியில் நர்சன்னாபேட்டை படாப்பட்டினம் சாலை மேம்பாட்டு பணிகள், ₹2,917 கோடியில் ஒஎன்ஜிசி பில்ட் கரையோர ஆழ்துளை திட்டம் ஆகியவற்றை நாட்டிற்கு பிரதமர் மோடி காணொலியில் அர்ப்பணித்தார். இதில் மொத்தம் ₹10,742 கோடியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் அடிக்கல்லை நாட்டினார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது:ஆந்திர மக்கள் காட்டும் பாசம் அளவிட முடியாதது. தெலுங்கு மக்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர். சில மாதங்களுக்கு முன் புரட்சி மாவீரன் அல்லூரி சீதாராமராஜின் 125வது பிறந்தநாளையொட்டி மாநிலம் வந்தேன். மீண்டும் ஒருமுறை மாநிலத்திற்கு வந்து வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.

அடிக்கல் நாட்டப்பட்ட பொருளாதார வழித்தடமானது ஆந்திராவில் வர்த்தகம், உற்பத்தியை அதிகரிக்க பல்வகை இணைப்புகளை மேம்படுத்தும். விசாகப்பட்டினத்தில் தொடங்கப்படும் இணைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை தொடர்பான திட்டங்கள், ஆந்திராவின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும். இந்தியாவை உலகத்துடன் இணைப்பதில் விசாகப்பட்டினம் மிக முக்கிய பங்காற்றுகிறது.

விசாகப்பட்டினம் வணிக நகரமாகும். ஒரு காலத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து மேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா வரை கப்பல்கள் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் ஆந்திராவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.ஆந்திர மக்கள் கல்வியால் மட்டும் தனி அடையாளத்தை பெறவில்லை. நட்பும், சேவை குணமும் தான் அந்த அங்கீகாரத்துக்கு காரணம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த வசதிகள் வழங்கப்படுகிறது.

இதற்காக ரயில்வே, சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகள் அதிநவீன வசதிகளுடன் செய்து தரப்படுகிறது.நாடு முழுவதும் வளர்ச்சி பயணம் நடந்து வருகிறது. உலகம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ​​இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வரலாற்றை எழுதுகிறது. உலக பொருளாதாரம் நெருக்கடியில் உள்ளது. எரிபொருள் முதல் உணவு வரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஆனால், இந்த நேரத்திலும் இந்தியா பல தடைகளை உடைத்து வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. நாடு முழுவதும் ஏழை, நடுத்தர மக்களுக்கு இரண்டரை ஆண்டுகளாக இலவச அரிசி வழங்கப்படுகிறது.

பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6 ஆயிரம் வீதம் நேரடியாக அவர்களது கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு எப்போதும் ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, தெலுங்கில் உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் தொடர்ந்து பேசினார்.

கூட்டத்தில் கவர்னர் விஷ்வபூஷன் ஹரிசந்திரன், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: