டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. புகைப்படம்,வீடியோ, ஆடியோவை அச்சு அசலாக போலியாக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ‘டீப்ஃபேக்’ ஆகும். இதன் மூலம் ஒருவரின் புகைப்படம், வீடியோவில் மற்றொருவரின் உருவத்தை ஏற்றி, நிஜம் போல உருவாக்க முடியும்.

இந்நிலையில் வழக்கறிஞர்களின் குரல் என்ற அமைப்பின் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மிகவும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் அமீர்கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரின் வீடியோக்கள் அனைத்தும் இந்த டீப்ஃபேக் தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஒரு அறிவுறுத்தலுடன் கூடிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார். மேற்கண்ட மனு தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் மனுதாரர் கூறும் கருத்து ஏற்புடையதாக இருக்காது.

அரசியல் பேரணியில் உரையாற்ற செல்லும்போது, தேர்தல் ஆணையத்திடம் அரசியல்வாதிகள் அனுமதி பெற வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது. மக்களவை தேர்தல் நடந்து வரும் இந்த நேரத்தில் எந்தவித உத்தரவுகளையும் தேர்தல் ஆணையத்திற்கு எங்களால் பிறப்பிக்க முடியாது.

இருப்பினும் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடம் விட்டு விடுகிறோம்” என்று தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர். அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,‘‘மனுதாரர் குறிப்பிட்ட அனைத்து வீடியோக்களும் நீக்கம் செய்யப்பட்டு குற்றவியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

The post டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: