கரூர் அருகே தனியார் தோட்டத்தில் பல்லவர் கால சிவலிங்கம் நந்தி கண்டுபிடிப்பு

க.பரமத்தி: கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சி தாதம்பாளையத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் ராஜவாய்க்காலை ஒட்டி  சிவலிங்கம், நந்தி ஆகிய சிலைகள் பாதி புதைந்துபடி இருப்பது சிவனடியார்களால் கண்டறியப்பட்டது. இதனை குஜிலியம்பாறையை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் சிவசங்கர், ஜெகதினேஷ், கரூர் சுப்பிரமணியன், தரகம்பட்டி சிவநாயனார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:  இந்த பகுதி கி.பி 950 வரை பல்லவப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. இங்கு ஒரு மிகப்பெரிய சிவன் கோயில் இருந்திருக்கலாம். கால ஓட்டத்தில் கோயில் அழிந்திருக்கலாம். இன்னும் நிறைய சிற்பங்கள் காணாமல் போய் விட்டது.

கல்வெட்டுகள் எதுவும் கிடைக்காததால் இக்கோயில் எந்த அரசரின் கால கட்டத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் சிற்பத்தின் அமைவை வைத்துப் பார்க்கும் பொழுது பல்லவர்களின் சிற்பக்கலை என உறுதியாக சொல்லலாம். மேலும் இப்பகுதியில் ஆய்வு செய்தால் இது போன்ற பல தகவல்கள் வெளிப்படும் என்றனர். இந்த சிவலிங்கம், நந்தி ஆகியவை தாதம்பாளையம் பகவதியம்மன் கோயில் எதிரே வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: