வேலூர் மாவட்டத்தில் தொடரும் வடகிழக்கு பருவ மழையால் வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தொடரும் வடகிழக்கு பருவ மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த 29ம்தேதி தொடங்கியது. வேலூர் உட்பட வடமாவட்டங்களில் சாரல் மழையாகவே பெய்து வந்தது. இந்நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மிதமானது முதல் கனமானது வரை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னை அணைக்கட்டில் 20.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பதிவான மொத்த மழை அளவு 95.7 மிமீ. சராசரி மழை அளவு 11.95 மிமீ.

வேலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சமத் நகர், முள்ளிப்பாளையம் கோரிமேடு, திடீர் நகர் உட்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தகவல் அறிந்த மாநகராட்சி நல அலுவலர் பொறுப்பு முருகன் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதியில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். இம்மழையின் காரணமாக வேலூர், அணைக்கட்டு பகுதிகளில் 5 வீடுகள் லேசான சேதமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வெளியேற்றி வருகின்றன. அதேநேரத்தில் தொடர்ந்து பெய்து வரும் இம்மழையால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையில் அதிகபட்சமாக பனப்பாக்கத்தில் 54.40 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் பதிவான மொத்த மழை அளவு 324.50 மி.மீ. சராசரி மழை அளவு 32.45 மிமீ.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையில் அதிகபட்சமாக நாட்றம்பள்ளியில் 99.60 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் பதிவான மொத்த மழை அளவு 386.80 மிமீ. சராசரி மழை அளவு 64.47 மிமீ.

அதேபோல் மூன்று மாவட்டங்களில் உள்ள அணைகளான வேலூர் மாவட்டம் மோர்தானா அணை தனது முழு கொள்ளளவான 37.72 அடியில் முழுமையாக வெளியேறி அணையில் இருந்து 350 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ராஜாதோப்பு அணை தனது முழு கொள்ளளவான 24.57 அடியில் 11.94 அடி நிரம்பியுள்ளது. அணைக்கான நீர்வரத்து ஏதும் இல்லை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவான 26.24 அடி முழுமையாக நிரம்பியுள்ளது. அணைக்கான நீர்வரத்து 266.54 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மூன்று மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 177 ஏரிகள் முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளன.

மாவட்டங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):

வேலூர் மாவட்டம்

குடியாத்தம் 8.6, மேலாலத்தூர் 13.20, காட்பாடி 5.40, திருவலம் சுகர்மில் 10.20, பொன்னை அணைக்கட்டு 20.20 மி.மீ, வேலூர் 17.10, மோர்தானா 9, ராஜாதோப்பு 12.

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை 28.60, பாலாறு அணைக்கட்டு 33.20, வாலாஜா 19, ஆற்காடு 39.40, சோளிங்கர் 23.30, கலவை 25.40, காவேரிப்பாக்கம் 37, பனப்பாக்கம் 54.40, அரக்கோணம் 25.60, மின்னல் 38.60.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் 78.20, ஆண்டியப்பனூர் 32, வாணியம்பாடி 56, ஆலங்காயம் 76.80, நாட்றம்பள்ளி 99.60, ஆம்பூர் 44.20.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக ஜமுனாமரத்தூரில் 65 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் மாவட்டத்தில் ஆரணியில் 34, செய்யாறில் 37, செங்கத்தில் 32.20, வந்தவாசியில் 47.90, போளூரில் 26, திருவண்ணாமலையில் 26.40, தண்டராம்பட்டில் 8.50, கலசப்பாக்கத்தில் 61.40, சேத்துப்பட்டில் 25.70, கீழ்பென்னாத்தூரில் 63.60, வெம்பாக்கத்தில் 24.50 மில்லி மீட்டர் என மொத்தம் 452.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

Related Stories: