பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கும்மாளம்; நள்ளிரவு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு: உத்தண்டி பண்ணை வீட்டில் 5 பேர் கைது

துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி பண்ணை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நள்ளிரவு பட்டாசு வெடித்து  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்கள் உட்பட 32 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில்  பண்ணை வீடு உள்ளது. இந்த  பண்ணை வீட்டில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த கிரண் (29) என்பவரின் பிறந்தநாள் விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. விழாவில் 15 பேர் மட்டுமே கலந்துகொள்வதாக கூறி 14 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு புக் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் 6 பெண்கள், 31 ஆண்கள் உட்பட 37 பேர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்துள்ளனர். 15 பேர்தான் கலந்துகொள்வோம் என கூறிவிட்டு அதிகளவில் ஆட்கள் வந்ததால், பண்ணை வீடு ஊழியர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அவர்கள், இங்கு 15 பேர் மட்டும்தான் தங்குவார்கள். மற்றவர்கள் பிறந்தநாள் விழா முடிந்ததும் சென்றுவிடுவார்கள் என கூறியுள்ளனர். இதனால் ஊழியர்கள் 37 பேரையும் அனுமதித்துள்ளனர்.

பிறந்தநாள் விழாவை நள்ளிரவு 12 மணி அளவில் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட திட்டமிட்டு 30 பீர், 10 மது பாட்டில்கள், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு மது அருந்தியும், உணவு அருந்தியும், கேக் வெட்டியும் நண்பர்கள், தோழிகளுடன் கிரண் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது பட்டாசு வெடித்துள்ளனர்.  பட்டாசு வெடித்ததால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்கமுடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி கானத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதனால் மதுபோதையில் இருந்தவர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பெண்கள் உட்பட 32 பேரை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். இதில், நள்ளிரவு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அம்பத்தூரை சேர்ந்த கிரண் (29), சாய்பாலன் (29), ராணிப்பேட்டை வேலம்புதூரை சேர்ந்த வித்யாதரன் (32), சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆண்டனி (22), ராயபுரத்தை சேர்ந்த கௌரிசங்கர் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: