குஜராத் முதற்கட்ட தேர்தலுக்கு பாஜகவில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: போட்டியிட மறுத்த மாஜி முதல்வரின் பெயரும் உள்ளது

அகமதாபாத்: குஜராத் மாநில ேபரவை முதற்கட்ட தேர்தலுக்கான 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. டிச. 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. பாஜக இதுவரை 160 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 22 பேரின் பெயரை அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த முறை சீட் கிடைக்காத முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளனர். மீண்டும் ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பாஜக, தனது முதல்கட்ட தேர்தலுக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி முதல் மொத்தம் 40 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான், ஹிமந்தா பிஸ்வா சர்மா, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. அதே நேரம் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, முன்னாள் துணை முதல்வர் நிதின் படேலின் பெயரும் உள்ளது. மேலும் நடிகையும் எம்பியுமான ஹேமமாலினி, நடிகர் பரேஷ் ராவல் ஆகியோரும் பாஜகவுக்காக பிரசாரம் செய்யவுள்ளனர்.

Related Stories: