மயிலாடுதுறையில் வரலாறு காணாத மழை; டெல்டாவில் 1 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் மூழ்கியது: 4வது நாளாக மீனவர்கள் முடக்கம்

திருச்சி: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நேற்று வலுப்பெற்றதால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு துவங்கிய மழை இன்று வரை விடிய விடிய இடைவிடாமல் பெய்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு பொழிந்தது. அதேசமயம், மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு மழை வெளுத்துக்கொட்டியது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று ஒரே நாளில் 436 மிமீ மழை பதிவானது. இந்த மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விளை நிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

இதேபோல் நாகை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழையும், மிதமான மழையும் பெய்தது. டெல்டாவில் இன்று காலை பல இடங்களில் மிதமான மழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் 65 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. சீர்காழி அருகே செம்பதனிருப்பு அள்ளி விளாகம், நடராஜப்பிள்ளை சாவடி, நாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர் வாழை, செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான், கீழையூர், புஞ்சை, ராதா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் வாழை தோப்புகளில் தண்ணீரில் தேங்கி நிற்கிறது.

நாகை மாவட்டம் பெருங்கடம்பலூர், இளங்கடம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கரில் விதை தெளித்து 9 நாட்களே ஆன இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களும், தஞ்சை ரெட்டிபாளையம், பூதலூர், கள்ளப்பெரம்பூர், ஒரத்தநாடு தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் 10ஆயிரம் ஏக்கர் இளம் சம்பா பயிர்கள், திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர், நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம், மன்னார்குடி பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இதேபோல் அரியலூர், கரூர் மாவட்டம் குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளில் 7000 ஏக்கர், திருச்சி மாவட்டத்தில் பழக்கனாங்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  5000 ஏக்கர் சம்பா வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

டெல்டாவில் மொத்தமாக 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. மழையால் மயிலாடுதுறையில் தாழ்வான இடங்களில் உள்ள சுமார் 500 வீடுகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறையில் எம்ஜிஆர் காலனியில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரில் சென்று அமைச்சர் மெய்யநாதன் இன்று காலை ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் லலிதா, எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடல் சீற்றம் மற்றும் கடலில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் ஒரு லட்சம் மீனவர்கள் இன்று 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் இன்று 2வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மரம் விழுந்து டிரைவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை சேர்ந்தவர் செல்வம்(54) அரியலூருக்கு லாரியில் ஜெனரேட்டர் ஏற்றி வந்தார். ஜெயங்கொண்டம் சாலையில் ஜெனரேட்டரை, கிரேன் இயந்திரம் மூலம் கீழே இறக்கியபோது, அருகிலிருந்து புளிய மரத்தில் இயந்திரம் மோதியதில் மழையில் ஊறியிருந்த மரம் வேரோடு சாய்ந்தது. இதில் மரம் தலையில் விழுந்ததில் செல்வம் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிதம்பரம்: கோயில் சுற்றுசுவர் இடிந்தது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், இளமையாக்கினார் கோயில் உட்பட ஆன்மீக தலங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையில் இளமையாக்கினார் கோயிலில் கீழக்கரை பகுதியில் உள்ள சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.

Related Stories: