ராகுல் நடைபயணத்தில் தஞ்சை காங். நிர்வாகி விபத்தில் பலி: தனி விமானத்தில் இன்று உடல் வருகை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் கணேசன் (60). திருமணமாகாதவர். இவர், தஞ்சாவூர் மாநகர, மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளராக இருந்தார். கட்சியினர், இவரை யாத்திரை கணேசன் என்று அழைத்து வந்தனர். கடந்த 45 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்த இவர், இந்திய ஒற்றுமைக்காக ராகுல்காந்தி நடத்தி வரும் நடைபயணத்தில் ஆரம்பத்தில் இருந்தே கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டில் கடந்த வியாழக்கிழமை யாத்திரை முடித்துவிட்டு தங்குமிடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியதில், கணேசன் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, யாத்திரை கணேசன்  உடல் தனிவிமானம் மூலம் இன்று காலை திருச்சி வருகிறது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சில் தஞ்சாவூர் கொண்டு வரப்படுகிறது. யாத்திரை கணேசனின் உடலுக்கு ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: