குமரியில் கும்பப்பூ பயிர்களுக்கு ஏற்ற பருவமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவமழையால் கும்பப்பூ பயிர்களுக்கு ஏற்றதாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலி அதிகப்படியால், நடவு எந்திரம் கொண்டு விவசாயிகள்  கும்பப்பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு கன்னிப்பூ, கும்பப்பூ என்று இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. தற்போது கும்பப்பூ சாகுபடிக்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி பறக்கை, சுசீந்திரம், தேரூர் உள்பட பல்வேறு இடங்களில் ஒரு மாதத்திற்கு முன்பு நடவு பணி முடிந்துவிட்டது. தற்போது தோவாளை சானல், அனந்தனார் சானல் உள்ளிட்ட கடைவரம்பு பகுதிகளில் சாகுபடி நடந்து வருகிறது.

நெல் சாகுபடி செய்யும்போது பெண் தொழிலாளர்களை கொண்டு நாற்று நடப்படும். தற்போது வேலை ஆட்கள் குறைவு, கூலி அதிகப்படியால் விவசாயிகள் மாற்று முறையாக நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தொழிவிதைப்பு, பொடிவிதைப்பு, எந்திரம் கொண்டு நடவு செய்யும் முறை பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மழையுடன் காற்று இல்லாததால் சேதங்கள் இல்லாமல் உள்ளது. மேலும் கும்பபூ பயிர்களுக்கு மழை தேவை ஆகும். தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி நடந்து வருகிறது. கும்பப்பூ சாகுபடி குமரி மாவட்டத்தில் தற்போது நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி இந்த சாகுபடி நடக்கிறது. கன்னிப்பூ சாகுபடியின் போது வயல்களில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது, வெயில் அதிகமாக அடிக்கவேண்டும்.  அப்போதுதான் கன்னிப்பூ பயிர்கள் செழித்து வளரும். ஆனால் கும்பப்பூ பயிர்களுக்கு வெயில் அதிகபடியாக அடிக்ககூடாது. அடித்தால், பயிர்கள் செழித்த வளராது. தற்போது பருவமழை பெய்து வருவதால், பயிர்கள் செழித்து வளர்கிறது. மேலும் அணைகளிலும் போதிய அளவு தண்ணீர் உள்ளது. இதனால் வருகிற கன்னிப்பூ சாகுபடிக்கும் தண்ணீர் தட்டுபாடு ஏற்படாது என்றார்.

Related Stories: