1000 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஊட்டியில் ரூ.100 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

ஊட்டி: முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின், ரூ.2.50 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் டைடல் பார்க் எனப்படும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைப்பது தொடர்பான ஆய்வு பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைப்பது தொடர்பான ஆய்வு நேற்று நடந்தது. தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி எம்.பி. ராசா மற்றும் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊட்டி அருகே எச்பிஎப் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடம், பட்பயர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடம் மற்றும் முத்தோரை பாலாடா பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்விற்கு பின் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க்  விரைவில் உருவாக்கப்படும். இதற்கு எச்பிஎப் நிலம் சிறந்த இடமாக உள்ளது. இந்த நிலத்தை வனத்துறையிடம் இருந்து பெற்று டைடல் பார்க் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ரூ.100 கோடி மதிப்பில் இங்கு டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு டைடல் பார்க் அமைப்பதன் மூலம் ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு ஐடி நிறுவனங்களும் தமிழகத்தை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றன. எனவே, நீலகிரி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைத்தால், ஏராளமான நிறுவனங்கள் வரக்கூடும். மைக்ரோ சாப்ட் நிறுவனம் கூட தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: